சைவ சமயத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய முக்கிய அமைப்பு!

சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்குமாறு சிவ சேனையின் நீண்ட காலக் கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனை அமைப்பின் துணைத்தலைவர் தமிழ்திரு மாதவனால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று இன்று (1) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை

இலங்கையின் இயற்கையோடு இணைந்த 10,000 ஆண்டு கால வரலாற்றுத் தொன்மைச் சமயமே சைவ சமயம் என்றும் அதற்கு பின் வந்ததே புத்த கிறித்தவ முகமதிய சமயங்கள் என்றும் பொருள் அமையத் தாங்கள் நேற்றுக் கூறிய கருத்துக்களைப் படித்ததும் சிவ சேனையில் உள்ளவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

இலங்கையின் வரலாற்றை ஆதி சமயமாக சைவ சமயப் பின்னணியில் பார்க்க வேண்டும் ஆராய வேண்டும் மீள எழுத வேண்டும் என்ற தங்களின் முன்னோடிக் கருத்தை வரவேற்கிறோம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்ந்து இருக்கும் சைவ சமயமே இலங்கையின் சமயமாக இருந்தும் இக்கால அரசியல் அமைப்பில் 1972ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுக்கு முரணாகப் புத்த சமயத்தை முன்னுரிமைச் சமயமாக எழுதி வைத்துள்ளீர்கள்.

இந்தத் தவறைத் திருத்த வேண்டும். அரசியலமைப்பில் சைவ சமயமும் முன்னுரிமைச் சமயமாக அமைய வேண்டும்.

சிவ சேனையில் உள்ள நாம் இக்கருத்துக்களை கடந்த ஆறு ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். 2021ஆம் ஆண்டு சித்திரையில் இலங்கை முழுவதும் இக்கருத்தை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணா நோன்பு இருந்தோம்.

சுவரொட்டிகள் செய்தி அறிக்கைகள் கருத்துருவாக்கங்கள் என அறவழியில் அமைதி வழியில் சைவ சமய வழியில் போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

சிவ சேனையின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் அடையாள உண்ணா நோன்பில் கலந்து கொண்ட படத்தையும் சுவரொட்டிகளின் படத்தையும் இணைத்துள்ளோம்.

புதிய அரசியலமைப்பில் சைவ சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் வரிகளைச் சேர்க்குமாறு இலங்கையில் உள்ள சைவ சமயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இலங்கையில் தொடரும் சைவ சமயத்தைப் பேண, பாதுகாக்க, வளர்க்க அரசு கொள்கை வகுக்கவும் நிதி ஒதுக்கவும் செயலாக்கவும் முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply