ஈழத்து கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான 'பாலைநிலம்' திரைப்படத்தின் வெளியீடு விரைவில்!

யூட்சுகி இயக்கம், தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ஈழத்து காவியமான ‘பாலைநிலம்’ திரைப்படமானது, எதிர்வரும் சனிக்கிழமை 03-12-2022/மாலை 6.30 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 04-12-2022/ காலை 10.30, மதியம் 2.30, மாலை 6.30 ஆகிய நேரங்களில் யாழ்ப்பாணத்தில் ராஜா திரையரங்கில் காட்சிபடுத்தப்படுகின்றது.

முற்று முழுதாக ஈழத்து கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள ‘பாலைநிலம்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஈழத்து திரைப்படங்கள் மக்களின் யுத்த அவலங்களை நீக்கம் செய்து கடந்து சென்றுவிட முடியாது. அந்தவகையில் யுத்தத்தின் கூர்மையை தாங்கிய எம்மக்களின் காயங்கள் ஆறியபோதும் யுத்தத்தின் வடுக்களுடன் பயணிப்பதை சித்தரிக்கின்றது. 

‘பாலைநிலம்’

கதாநாயகனாக எம்.ஜி.ஆர். காந்தன்  நடித்துள்ளார். இவர் புதியவன், ராசையாவின் ஒற்றைபனைமரம் படத்திலும் நடித்துள்ளார். அத்துடன் ஊடகத்துறையில் நீண்ட அனுபவத்தை கொண்டவர், கலைச்சுடர், கலைஇளவல் போன்ற விருதுகளை பெற்றவர். கதாநாயகியாக அபிரா நடித்திருக்கும் இத்திரைப்படம் யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியையும், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியையும் பேசுகிறது.

‘பாலைநிலம்’; திரைப்படத்திற்கு பிரசாந் கிருஸ்ணப்பிள்ளை இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் உருவான நான்கு பாடல்களும் வெளிவந்து பலரின் பாராட்டை பெற்று வருகின்றது. ‘பாலைநிலம்’ என்ற வார்த்தைக்குள்ளே உள்ள கொடுமை, தனிமை, துன்பம், வெறுமை, வெப்பம் எல்லாவற்றையும் தனது இசைமூலம் வெளிக்கொணர்ந்துள்ளார் இசையமைப்பாளர்.

பாலைநிலம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மகேந்திரசிங்கம். இவர் ஈழத்து சினிமாவில் நீண்ட அனுபவத்தை கொண்டவர். ஈழத்தில் வெளியான அனேக படங்களில் நடித்து பிரசித்தமானவர், நடிப்பிற்காக கலைஞானசுடர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளை பெற்றவர்.

யூட்சுகியின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள ‘பாலைநிலம்’ திரைப்படம் ஈழத்து மண்ணில் மறைந்துள்ள அழகிய இடங்களை எமது கண்முன்னே நிறுத்தியுள்ளது. 

பாலை நிலங்களையும், பசுமை நிலங்களையும் தனது ஒளிப்பதிவினூடாக எமது கண்கள் வியக்கத்தக்க அளவிற்கு விருந்தளித்துள்ளார்.’பாலைநிலம்’ திரைப்படமானது நடிகர்களான, மகாலிங்கம்,சாயா, விமல்றோய் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகியுள்ளது. பாடல்வரிகள் ரதி தனஞ்சயன் மற்றும் ரொனால்ட், படத்தொகுப்பு கி.பிரசாந் மற்றும் நிவீன் செய்துள்ளனர். தயாரிப்பு நிர்வாகம் ராஜாமகேந்திரசிங்கம் மற்றும் யூட்சுகி, சண்டைபயிற்சி நந்தா, வர்ணக்கலவை தங்கவேல் சிவனேசன் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

Leave a Reply