கோட்டா ஓட ஓட விரட்டப்பட்டதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்! – ரணிலுக்கு எச்சரிக்கை

“கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட அதே நிலைமை ஏனையவர்களுக்கும் ஏற்படும் என்பதை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணர வேண்டும்.” – இவ்வாறு  43 ஆம் படையணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் இனியாவது யோசிக்க வேண்டும். திறமையான ஒருவரை – நல்ல முறையில் ஆட்சி நடத்தக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டாம். அது இல்லாமல், எங்களது கட்சித் தலைவர்தான் ஆட்சி  செய்ய வேண்டும், எங்களது கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனோநிலையில் இருந்து மக்கள் மாறுபட வேண்டும்.

மக்களால் ஓட ஓட விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச சும்மா ஜனாதிபதி அல்ல. 69 இலட்சம் வாக்குகளைப்

பெற்றவர். ஜே.ஆரைப் போன்று முழுமையான நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவர். அரச நிர்வாகத்தை இராணுவ அதிகாரிகளை நியமித்து கைக்குள் எடுத்தவர். அப்படிப்பட்ட பலமான ஜனாதிபதியைத்தான் மக்கள் நேரில் களமிறங்கி விரட்டியடித்தார்கள்.

அவருக்கு ஏற்பட்ட நிலைமை வேறு ஒருவருக்கும் ஏற்படாது என்று சொல்ல முடியாது. தனக்கு விருப்பம் இல்லாத அரசைத் தேர்தல் மூலம் தோற்கடிப்பது போல் நேரடியாக வீதியில் களமிறங்கியும் தோற்கடிக்க முடியும் என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள்.

மக்களின் தற்போதைய போராட்டத்தை முறியடிப்பதற்காகப் பாடுபடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உணர வேண்டும்” – என்றார்.

Leave a Reply