கடன் மீள் செலுத்தலை புறக்கணிப்பதற்கான அபாயம் – மீண்டும் தரமிறக்கப்பட்டது இலங்கை !

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அண்மைய தரப்படுத்தலுக்கமைய தேசிய கடன் செலுத்தல் இயலுமையில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமைய, இலங்கையானது தேசிய கடன் செலுத்தலை நீண்ட காலம் தாமதிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் இலங்கையின் நீண்ட கால உள்ளூர் கடன் மதிப்பீடு சீ.சீ.சீ. யிலிருந்து சீ.சீ.யாக இரண்டு புள்ளிகளால் தரமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கை இதற்கு முன்னர் காணப்பட்ட சீ.சீ.சீ. தரப்படுத்தலுக்கமைய கடன் நிலைபேற்றுத்தன்மைக்கு காணப்பட்ட சந்தர்ப்பம் மிகக் குறைவாக இருந்ததோடு, கடன் மீள் செலுத்தலை புறக்கணிப்பதற்கான அபாயமும் கனிசமாளனவு காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சீ.சீ. புதிய தரப்படுத்தலுக்கமைய இலங்கையானது நீண்ட கால தேசிய கடனை புறக்கணிப்பதற்கான அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய வரி அறவீடு உயர் மட்டத்தில் காணப்படுகின்றமையே இதற்கான காரணமாகும் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய அதிக வட்டி வீதங்கள், நெருக்கடிமிக்க உள்நாட்டு நிதி நிலைமைகள் என்பவற்றின் காரணமாக , தேசிய கடன்களை மீள செலுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சுட்டிக்காட்டி இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய கடனானது 53 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம், இந்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்காக பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு தேசிய கடன் மறுசீரமைப்பையும் மேற்கொள்ள வேண்டிய நிலைமை இலங்கைக்கு ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர இலங்கை வெளிநாட்டு கடன் தொடர்பில் ‘ஆர்.டி.’ தரத்திலேயே காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறெனில் வெளிநாட்டு கடனை வரையறையுடன் மீள செலுத்தாமலிருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதை இந்த தரப்படுத்தல் குறிக்கின்றது.

Leave a Reply