பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் பஸில்: காய்நகர்த்தல்களும் தீவிரம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய இரகசிய கருத்து கணிப்பின் முடிவுகள் கிடைத்த பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டணிக் கட்சிகளை மீண்டும் கூட்டணியில் இணைக்க முயற்சித்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதனடிப்படையில் பசில் ராஜபக்ச கடந்த வாரம் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சென்று சுயாதீனமாக இயங்கி வரும் விமல் வீரவங்ச-உதய கம்மன்பில தரப்பு மற்றும் ஜீ.எல்.பீரிஸ்-டளஸ் அழகப்பெரும தரப்புக்கு மூன்றாம் தரப்பின் ஊடாக செய்தியை அனுப்பி இருந்ததாக பேசப்படுகின்றது.

எனினும் செய்தியை எடுத்துச் சென்ற மூன்றாம் தரப்பிடம் சீற்றமான பதிலை வீரவங்ச தரப்பு வழங்கியுள்ளதுடன், மக்கள் ஆணையை அழித்த பொதுஜன பெரமுனவுடன் மீண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டணி வைக்க போவதில்லை எனக் கூறியுள்ளனர்.

அத்துடன் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அழகப்பெரும அணியினரும் தமது கிடைத்த இந்த செய்தி தொடர்பில் எவ்வித பதிலை வழங்கவில்லை. முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச நடத்திய இரகசிய கருத்து கணிப்பில், பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் இருந்து வந்த ஆதரவு வெகுவாக குறைந்துள்ளதுடன் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்த கட்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்காக ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply