ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்கச் சதித்திட்டம்! அம்பலப்படுத்திய அமைச்சர்

“பிரதமர் பதவியிலிருந்து தினேஷ் குணவர்த்தனவை நீக்கிவிட்டு ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்க ‘மொட்டு’ க் கட்சியில் உள்ள ஒரு குழுவினர் திரைமறைவில் திட்டம் தீட்டுகின்றனர். இதற்கு ஒருபோதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கமாட்டார். நாமும் அசைந்து கொடுக்கமாட்டோம்.” – இவ்வாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

‘பிரதமரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? அந்தப் பதவிக்கு நீங்கள் முயற்சி செய்தமை உண்மையா?’ என்ற  கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த ஆண்டு மே 9ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகிய பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் சிலர் கூடிப் பேசி என்னைப் பிரதமராக்க விரும்பினர். நான் மறுத்துவிட்டேன். அதன்பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவாகினார். அந்தவேளையிலும் என்னைப் பிரதமராக்க ‘மொட்டு’க் கட்சியில் உள்ள சிலர்  விரும்பினர். அப்போதும் நான் மறுத்துவிட்டேன். என்னை விட அனுபவசாலிகள் கட்சியில் இருக்கின்றார்கள். அவர்களுள் ஒருவர்தான் பிரதமராக வேண்டும் எனக் கூறினேன்.

தினேஷ் குணவர்த்தனவை பிரதமாக்குவதற்கு முன்மொழிந்தவன் நான்தான். அதுமட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்குக் கடுமையாக உழைத்தேன். அது எல்லோருக்கும் தெரியும்.

தற்போதைய நிலைமையில் புதிய பிரதமர் அவசியம் இல்லை. தினேஷ் குணவர்த்தனவை நீக்கிவிட்டு ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்க ‘மொட்டு’க் கட்சியில் உள்ள ஒரு குழுவினர் திரைமறைவில் திட்டம் தீட்டுகின்றனர். இதற்கு ஒருபோதும் ஜனாதிபதி அனுமதி வழங்கமாட்டார். நாமும் அசைந்து கொடுக்கமாட்டோம்” – என்றார்.

Leave a Reply