மும்பை, டிச 04
மராட்டிய மாநிலம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி , ரிங்கி. 36 வயதான இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். பிங்கி, ரிங்கி சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர்.
இரட்டை சகோதரிகளான இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்பு வரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதேபோல், ஒரே நபரை திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என்றும் சகோதரிகள் முடிவு செய்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் பிங்கி, ரிங்கி சகோதரிகளின் தந்தை உயிரிழந்துவிட்டார்.
மேலும், சகோதரிகளின் தாயாருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதேவேளை பிங்கி, ரிங்கி சகோதரிகள் வசித்து வரும் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தவர் அதுல். ஒரே பகுதி என்பதால் பிங்கி, ரிங்கி சகோதரிகளுக்கும் அதுலுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட பிங்கி, ரிங்கியின் தாயாரை அதுல் தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். சில சமயங்களில் பிங்கி, ரிங்கியும் அதுலுடன் தனது தாயாரை காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, தாயாரை மருத்துவமனைக்கு காரில் அழைத்து செல்ல உதவிய அதுல் மீது சகோதரிகள் பிங்கி, ரிங்கிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
கடைசி வரை ஒன்றாகவே வாழவேண்டும் என்று எண்ணிய இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி தங்கள் காதலரான அதுலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். தங்கள் விருப்பம் குறித்து அதுலிடம் தெரிவிக்கவே அவரும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். அதேபோல், அதுலின் பெற்றோரும், இரட்டை சகோதரிகளின் தாயாரும் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டனர். இதனை தொடந்து பெற்றோர் சம்மதத்துடன் அதுலை இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி நேற்று திருமணம் செய்துகொண்டனர். அகுல்ஜ் ஹம்பூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அதுல் சகோதரிகள் பிங்கி, ரிங்கியை நேற்று திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். அதேவேளை, 2 பெண்களை திருமணம் செய்துகொண்டதாக அதுல் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இரட்டை சகோதரிகளான பிங்கி, ரிங்கி பெற்றோர் அனுமதியுடன் அதுல் திருமணம் செய்துள்ள நிகழ்வு அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.