ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை சரியான தெரிவு- பஸில் பெருமிதம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை சரியான தெரிவு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

சகல கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் சுதந்திரமாக அரசியல் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தாம் கொண்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் தற்பொழுது  அவ்வாறானதொரு சூழல் காணப்படுவதாகவும், மேலும், அனைத்து தரப்பினரும் சுதந்திரமாக அரசியல் செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (05) முற்பகல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக மையத்தில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அனைத்து தொழில்நுட்ப வசதிகள், பதிவு வசதிகள், மையப்படுத்தப்பட்ட விநியோக கூறுகள் மற்றும் பிற நவீன கூறுகளுடன் இலங்கையில் ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமான முதல் ஊடக செயற்பாட்டு மையமாக இது ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பசில் ராஜபக்ஷ,

முதலில் அரசியல் செய்வதற்கும், தேவையான செயற்பாடுகளை சுதந்திரமாக செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் பொருளாதாரம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார். கட்சி பிளவுபட்டுள்ளதாக சில கட்சிகள் மத்தியில் கருத்துக்கள் இருந்தாலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு போதும் பிளவுபடவில்லை எனவும் ஒரு சிலர் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் கட்சி பிரதானமாக நாட்டு மக்களுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தான் இன்னமும் தமது கட்சியின் தலைவராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், “வித்தியாசமாக சிந்தியுங்கள் – பயப்பட வேண்டாம்” என்பதே தமது கட்சியின் குறிக்கோள் என சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர், சிலர் வித்தியாசமாகச் சிந்திக்கப் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர் என சுட்டிக்காட்டிய அவர், அந்த தலைவரின் வழிகாட்டுதலுக்கு அமைய அரசியலை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சி என்ற ரீதியில் எந்தவொரு தேர்தலுக்கும் தாம் தயார் என சுட்டிக்காட்டிய பசில் ராஜபக்ஷ, தேர்தல் என்பது மக்களின் விருப்பமோ அல்லது வெறுப்போ என்றும், மக்களின் விருப்பத்தை வென்றெடுக்க கட்சியாக முயற்சிப்போம் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளதாக தெரிவித்த அவர், இது தொடர்பில் முழு தேசத்திற்கும் தனது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

தமது கட்சி மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் நிறைவேற்ற முடியாவிட்டால் வருந்துவதாக தெரிவித்த பசில் ராஜபக்ஷ, குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தார். தாம் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர், 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாடாளுமன்ற தடை ஏற்பட்டுள்ளதாகவும் தாம் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்ததோடு தான் அதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

69 இலட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாய ராஜபக்ச அந்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன் பிரகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியொருவர் பாராளுமன்றத்தினூடாக தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் அதற்கமைய தான் அதற்கான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இந்நிகழ்விற்கு – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சஞ்சீவ எதிரிமான்ன, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முகாமைத்துவ செயலாளர் ரேணுகா பெரேரா மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடக மையத்தின் தலைவர் திலக் தெனுவர ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply