இலங்கையர்களின் உயிருக்கு ஆபத்து! மரண சான்றிதழ்களில் மறைக்கப்படும் இறப்புக்கான காரணங்கள்!

இலங்கையில் தற்போது நிலவும் இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பவற்றுக்கான மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கக்கூடும் என அகில இலங்கை தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என்றும் இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் ரவீந்திர கஹந்தவாராச்சி கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது இதய நோயாளர்களுக்கு கட்டாயமாக வழங்கப்பட வேண்டிய அடிப்படை மருந்துகளுக்கும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இருப்பினும் உயிரிழக்கும் நோயாளர்களின் மரண சான்றிதழில் மருந்து தட்டுப்பாட்டினை உயிரிழப்பிற்கு காரணமாக குறிப்பிடப்படுவதில்லை. மாறாக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், நோயாளர்களுக்கு ‘எக்ஸ் ரே’ எடுப்பதற்கான வசதிகளும் இல்லை. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் வைத்தியசாலை கட்டமைப்பினை நிர்வகித்துச் செல்வது உயிரற்ற நபர்கள் நாட்டை ஆட்சி செய்வதைப் போன்றது.

இவ்வாறான அபாய நிலைமை ஏற்படும் என்று நாம் பல சந்தர்ப்பங்களில் இந்நாட்டின் ஆட்சியாளர்களுக்கு அறிவித்தோம். ஆனால் அதனை தடுப்பதற்கு அரசாங்கத்தினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இதற்கான சிறந்த தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *