பதுளை கந்தகெடிய போலீஸ் குற்றத்தடிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றறிப்பின்போது பழமையான கௌதம புத்தர் சிலை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தகெடிய போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய குறித்த போலீஸ் நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் சிலையை கொள்வனவு செய்யும் நபர்களாக வேடம் தரித்து குறித்த வீட்டிற்கு சென்று சிலையை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதன் போது சந்தேக நபர்களிடமிருந்து, சிலை மாறுவேடம் பூண்ட போலீசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் போது மேலும் சில போலீஸ் குழுவினர்கள் குறித்த வீட்டினை சுற்றி வளைத்து சிலையை கைப்பற்றியதோடு, 46, 26 ,41 வயதுடைய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த புத்தர் சிலை மிகப் பழமை வாய்ந்தது என்றும், குறித்த நபர்கள் அந்த சிலையை 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக பேரம் பேசியதாகவும் கந்தகெடிய போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் பதுளை, நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் கந்தகெடிய போலீஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.