மீனவ சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பாடசாலையில் இருந்து இடை விலகிய மீனவ சமூக மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டத்திலுள்ள கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீபன் பாடசாலைகளில் படத் தொழில் சமூகங்களைச் சார்ந்த மாணவர்களின் விவரங்கள் கோரப்படுவது தொடர்பில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
அவர் அவ்வாறு கருத்தையும் முன்வைப்பதற்கு முன்னர் மீனவ சமூகங்கள் சார்ந்த அமைப்புக்களுடன் கலந்துரையாடி குறித்த கருத்தை தெரிவித்திருக்க வேண்டும். மீனவ சமூகம் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகின்ற நிலையில் நாம் பலரிடம் எமது சமூகம் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தோம். மீனவ சமூகம் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலையில் இருந்து இடை விலகி தமது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு விலகியவர்களுக்கு தொழில் பயிற்சியை (NvQ) தரம் 2 சான்றிதழை பெற்று கொடுப்பதற்காக வட மாகாண ஆளுநரிடம் கோரிக்கையை முன் வைத்தோம் .
அதன் பயனாக பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மீனவ சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் விவரங்களைப் பெறுவதற்கு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதனை குழப்பம் விதமாக ஒரு சமூகம் சார்ந்த மாணவர்களின் விவரங்களை எடுப்பது பிழை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் கருத்து தெரிவிப்பது பாதிக்கப்பட்ட சமூகம் மீண்டெழுவதை தடுப்பதாகும்.அது மட்டுமல்லாது எமது சமூகத்தில் போ சாக்கு குறைந்த சிறுவர்கள் அதிகமாக இனம் காணப்பட்ட நிலையில் அவர்களுக்கான சத்துணவு திட்டத்தை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தோம்.
அதன் பயனாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒழுங்கு படுத்ததலில் சிவில் அமைப்புகள் ஒன்றிணைத்து கிராம மட்டங்களில் சத்துணவு திட்டத்தை வழங்கி வருகின்றன. இவ்வாறான நிலையில் அரசியல் காரணங்களுக்காகவா மீனவ சமூகங்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற நலத் திட்டங்களை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் குழப்புகிறாரா என எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறோம் மீனவ சமூகம் வாழ்கின்ற கரையோர பிரதேசங்களில் மேலதிக கல்வியை கற்பதற்கான தனியார் கல்வி நிலையங்கள் கிடையாது. கரையோர பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு பாடசாலைகளில் தொண்டு அடிப்படையில் மாலை நேர வகுப்புகளை நடாத்த முன் வாருங்கள்.
ஆகவே மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் பலரிடம் கோரிக்கை முன்வைத்தபோதும் வடக்கு ஆளுநரே எமது கோரிக்கையை செயல்படுத்துவதை குழப்ப வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் தயவாக கேட்டுக்கொள்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.