வியாயாடிக்குளம் கட்டுமான உடைவுக்கு காரணம் யார்?

ஜோசப் நயன்

மன்னார் நீர்பாசன திணைக்களத்தினால் முறையற்ற திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்ட வியாயாடிக்குள கட்டுமான உடைவால் 559367.05 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிலவத்துறை நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்ற போதிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட விதம் மற்றும் கட்டுமானத்தினால் இதை விட பல மடங்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் எதிர்காலத்தில் இதை விட அதிகளவான இழப்புக்கள் ஏற்படலாம் என வடமாகாண  நிர்மாண மேம்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிக்குட்பட்ட வியாயாடிக்குளத்திற்கான புணரமைப்பு பணிகள் பூரணப்படுத்தப்படாத நிலையிலேயே குளத்தின் வான் பகுதியின் ஊடாக மேலதிக நீரை வெளியேற்றும் கட்டமைப்பு சுவர் இடிந்து நீரினால் அடித்து செல்லப்பட்டுள்ளமை அப்பகுதியில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை நீர்பாசன திணைக்கள எல்லைக்குள் காணப்படும் வியாயடிக் குளம் மன்னார் மாவட்டத்தில்  பெரிய குளங்களில் ஒன்றாகும் அனுராதபுர மாவட்டத்தின் மேதகம வாவியின் ஊடாக வருடத்தில் 9 மாதங்களுக்கு மேலாக இவ் குளத்திற்கு  மேலதிக நீர் வருவதனால் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை குறைப்பதற்கு எனவும் விவசாய செய்கைக்கு தேவையான நீரை தேக்கி வைப்பதற்கும்  குறித்த பகுதியில் 169 மில்லியன் ரூபா நிதி கோரிக்கைக்கு அமைவாக நிர்மான பணிகள் இடம் பெற்றது.

அதன் அடிப்படையில் 2017 ஆண்டு தயாரிக்கப்பட்ட குறித்த செயற்திட்ட முன் மொழிவு பல செயற்திட்ட நிதி ஒதுக்கீட்டுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நீர்பாசன திணைக்களத்தின் ERRMI எனும் செயற்திட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டு மன்னார் நீர்பாசன திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பில் சிலாவத்துறை நீர்பாசன திணைக்காலத்தின்  ஊடாக கட்டுமாண பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு நிர்மாண நடவடிக்கைகள் இடம் பெற்றதாக மன்னார் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

மன்னார் சிலாவத்துறை வியாடிக்குளம் தேசிய நீர்பாசன திணைக்களத்தின் பாரிய நீர்பசன குளங்களில் ஒன்றாகும்  குறித்த குளத்தை நம்பி 610 ஏக்கர் விவசாய நிலங்கள் காணப்படுவதுடன் பாலைக்குளி, கரடிகுளி, முள்ளிக்குளம், மறிச்சிக்கட்டி போன்ற கிராமங்களும் காணப்படுகின்றது.

வருடத்தில் மூன்றுமாதங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து மாதங்களிலும் இவ் குளத்தில் அதிகளவான நீர் காணப்படுவதுடன் மழைகாலங்களில் ஏற்படும் அதிக மழைவீழ்சி காரணமாக வியாயாடிக்குளம் சார்ந்த பகுதிகளில் வெள்ளப்பாதிப்பும்,மண் அரிப்பும் இடம் பெற்று வந்துள்ளது அதே நேரம் வெள்ளப்பாதிப்புக்கள் ஏற்படுகின்ற நேரங்களில் குளக்கட்டமைப்பில் காணப்படும் மதகு ஊடாக வெளியேறும் நீர் மற்றும் காட்டு பகுதிகளில் இருந்து வருகின்ற நீர் இணைந்து குளத்தின் மதகு பகுதியை சூழ பாரிய மண்ணரிப்பை ஏற்படுத்தி வந்த நிலையிலேயே தொடர்சியான இப்பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு என வியாயாடிக்குள புணரமைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் குறித்த செயற்திட்டம் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

பிரதான வான், நீர் வடிந்தோடும் பிரதான பகுதி, நீர்வடிந்தோடும் பகுதியை பாதுகாக்கும் கட்டமைப்பு என மூன்று பகுதிகளை உள்ளடக்கி கட்டுமான பணிகள் இடம் பெற்று வந்த நிலையில் அதன் மூன்றாம் கட்ட பணியின் இறுதி செயல்பாட்டின்போது ஏற்பட்ட மழை காரணமாக குறித்த பாதுகாப்பு கட்டமைப்பின் 25 மீற்றர் பகுதி நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது என சிலவத்துறை நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும் இவ் உடைவுகள் காரணமாக 559367.05 இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவ் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு இல்லை எனவும் நீர் குளத்தில் சேகரிக்கப்பட்டு முதற்கட்ட பரிசோதனை நடவடிக்கையின் போதே கட்டுமானம் இடிந்துள்ளதாக வியாயாடிக்குள விவசாய அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் வியாயாடிக்குள விவசாய அமைப்புக்களின் கோரிக்கைக்கு இணங்க நிர்மாண மேம்பாட்டு மையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நேரடி களவியத்தின் ஊடாக  நீர்பாசன திணைக்களத்தின் திட்டமிடல் இல்லாத நடவடிக்கை காரணமாகவும் ஒழுங்கான முறையில் நிர்மாணம் நடைபெறாமையினாலுமே இவ்வாறு பாவனைக்கு கையளிக்கப்படாத நிலையிலேயே குறித்த பகுதியில் உடைவு ஏற்பட்டுள்ளதாக வடமாகாண ரீதியாக நிர்மாணம் தொடர்பான பிரச்சினைகளுடன் பணியாற்றும் மையம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் குளத்தின் மேலதிக நீர் மதகு ஊடாக வெளியேறி வான் பாய்ந்து வேகம் குறைக்கப்பட்டு கடலுடன் கலக்க செய்வதே செயற்திட்டத்தின் பங்காகும் இவ் செயற்பாட்டின் படி நீர் வான்பகுதியை பாதுகாப்பதற்கு என அமைக்கப்பட்ட பாதுகாப்பு பகுதி அத்துடன் இரு மருங்கிலும் 126 மீற்றருக்கு அமைக்கப்பட்ட பாதுகாப்பு பகுதி அதனை தொடர்ந்து நீர் வழிந்தோடும் பகுதியின் கட்டுமானமும் இடம் பெற்றிருந்தது.

இவ்வாறான பின்னனியில் கட்டுமானம் பூராணப்படுத்தப்படாத நிலையிலேயே 169 மில்லியன் ரூபா செயற்திட்டத்தின் ஒரு பகுதி உடைந்தமை உண்ணிப்பாக ஆரயப்பட வேண்டிய விடயமாகும்.

அதன் பிரகாரம் குறித்த கட்டுமான உடைவு தொடர்பாக ஆராய்ந்த நிலையில் கட்டுமான உடைவுக்கு சில காரணங்கள் மன்னார் நீர்பாசன திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டிருந்தது. 

சிறுபோகத்திற்கு என வியாயாடிக்குளத்தில் மழை நீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  பெய்த கன மழை காரணமாக நள்ளிரவு நேரத்திலேயே மூன்றாவது கட்டமாக அமைக்கப்பட்ட நீர்பாதுகாப்பு கட்டமைப்பு பகுதியில் ஊடைவு ஏற்பட்டதாக மன்னார் நீர்பாசன திணைக்களம் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.

அதே நேரம் குறித்த கட்டுமான பணி நீர்பாசன திணைக்களத்தின் நேரடி கண்கானிப்பில் இடம் பெற்றமையினால் நிதி விடுவிப்புக்கு ஏற்றவகையிலேயே கட்டுமான பணிகள் கட்டம் கட்டமாக இடம் பெற்றதாக நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் ஜோகராஜ தெரிவிக்கின்றார்.

அவ்வாறு கிடைக்கும் நிதிக்கு அமைவாக கட்டம் கட்டமாகவே பணிகளை மேற்கொண்டமையினால் கட்டுமாணம் பூரணப்படுதப்படாத நிலையிலும் எதிர்பாரத விதமாக ஏற்பட்ட திடீர் மழையும் இவ் சம்பவங்களுக்கு காரணமாகி விட்டன என அவர் தெரிவிக்கின்றார்.

மேலும் மழைகாலத்தில் நிலம் அரிப்புக்கு உள்ளாகி பகுதியளவு நிறைவுசெய்யப்பட்ட தடுப்பு சுவர் இருபக்கங்களில் அரிப்பு ஏற்பட்டு கட்டுமானத்தில் நிலைகுழைவு ஏற்பட்டு கிழே விழுந்துள்ளதாக சிலாவத்துறை நீர்பாசன திணைக்களம் தகவல் அறியும் உரிமைசட்டத்தின் ஊடாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளது. 

இந்த நிலையில் வியாயாடிக்குள விவசாய அமைப்புக்களின் கோரிக்கையின் அடிப்படையில் வியாயாடிக்குள கட்டட நிர்மாணத்தில்  காணப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக நேரடியா ஆராய்ந்த நிர்மாண மேம்பாட்டு மையம் நிர்மாணம் தொடர்பில் பல குறைபாடுகளை சுட்டிகாட்டியுள்ளனர்.

169 மில்லியன் ரூபா பெறுமதி மிக்க ஒரு திட்ட முன்மொழிவு அனுமதி இன்றி ஒரு சாதாரண பொறியியலாளரால் அதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிக்கபட்டுள்ளதாக அவ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் dam safety circular No:-01/2021 date 14.10.2021 பிரகாரமும் circular No no:- 03/2020 dated 22.10.2020 அடிப்படையில் கட்டுமான நடவடிக்கை இடம் பெறவில்லை என அவ் மையம் தெரிவிக்கின்றது.

மேலும் இவ் கட்டட நிர்மாணம் தூர நோக்குடன் செயற்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்படவில்லை எனவும் அடுத்த வருடமும் திருத்த வேலைகள் வர வேண்டும் என உள்னோக்கம் இருப்பது போன்ற தோற்றம் இந்த கட்டுமாண பணி முழுவதுமாக காணப்படுவதாக அவ் மையம் தெரிவிக்கின்றது.

அதே போன்று project plan பூரணமாக தயாரிக்கப்படவில்லை அதே நேரம் நிர்மாணம் இடம் பெற இருந்த பகுதியின் நிலத்தின் தன்மை,வெளிமேற்பரப்பில் இருந்து வரும் நீரின் அளவு போன்ற ஆவணங்கள் தயாரிக்கப்படவில்லை என அவ் அமையம் கூறுகின்றது.

மேலும் இவ் நிர்மாணம் தொடர்பில் 2020 ஆண்டு தயாரிக்கப்பட்ட வரைபடங்கள் மாதிரிப்படங்களே அவற்றில் நீர்பாசன திணைக்கள பணிப்பாளர் கையொப்பம் இடாமை தெரியவந்துள்ளதாக அவ் அமைப்பு சுட்டிகாட்டுகின்றது.

அதை விட சிறப்பாக 2020 ஆண்டு 169 மில்லியன் பெறுமதி மிக்க இத் திட்டம் ஒரு தொழில்நுட்ப உதவியாளரால் வடிவமைக்கப்பட்டு பொறியியளாலரால் பரிசீலிக்கப்பட்டுள்ளது மேலும் 2020 ஆண்டு 22.9 மில்லியன் செலவழிக்கப்பட்டு spill க்கு கீழான transition இன் பக்கசுவர் கட்டப்பட்டுள்ளது ஆனால் 2021 இப்பக்க சுவர் வளைவாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே 2020 ஆண்டு இச்சுவர் கட்டப்படமல் இருந்ததா என அவ் அமைப்பி கேள்வி எழுப்பியுள்ளது.

அதே நேரம் வியாயாடிகுளம் வான் புணரமைப்பு வேலையானது நீர்பாசன அத்தியாவசிய புணரமைப்பு வேலைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் இதில் உள்ளடக்கப்படும் புணரமைப்பு வேலைகள்யாவும் திணைக்களத்தின் சாதாரண ஆண்டுக்கான வேலைக்குள் உள்வாங்கி செயற்படுத்தப்பட்டுள்ளது எனவே அதற்கான திட்ட முன்னொழிவுகள் கோரப்படுவதில்லை என சிலாவத்துறை நீர்பாசன திணைக்களம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் ஒவ்வொரு ஆண்டுக்குமான குளங்களின் அத்தியாவசிய புணரமைப்பு வேலைகள் இணங்கானப்பட்டு அவ் வேலைகளுக்கான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு தலைமை காரியாலயத்தில் இருந்து அனுமதி பெறப்படும் எனவும் இவ் வேலைகள் நீர்பாசன திணைக்களத்தின் நிதி நிர்வாக ஒழுங்கமைப்புக்கமைய சாதாரணமாக செய்யப்படவேண்டிய வேண்டிய வேலைகள் ஆகும் எனவே ஆய்வறிக்கை தயாரிக்கப்படுவதில்லை என சிலவத்துறை நீர்பாசன திணைக்களம் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளது.

169 மில்லியன் ரூபா செயற்திட்டம் ஒன்று ஆரம்பிக்க முன்னரே ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்கு உள்ள நிலை வருடம் தேறும் வெளியேரும் நீரின் அளவு வேகம் மண்ணின் தன்மை,மண் அரிப்பு ஏற்படும் அளவு, காட்டு பகுதி ஊடாக வெளியேரும் நீர் அவை மதகில் இருந்து வரும் நீருடன் சந்திக்கும் இடம் போன்ற விடயங்களை ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தி கட்டுமானப்பணிகளை மேற்கொண்டிருந்தால் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றிருக்காது எனவும் மக்களின் வரிப்பணமும் வீணாகியிருக்காது எனவும் இந்த கட்டுமான உடைவால் ஏற்பட்டிருக்கும் நஸ்ரமும் ஏற்பட்டிருக்காது என கட்டட நிர்மாண மையத்தின் தலைவர் உருத்திரலிங்கம் தெரிவிக்கின்றார் மேலும் உடைவுக்கு பின்னர் இடம் பெற்றுள்ள கட்டுமாணங்களும் முறையான விதத்தில் அமைக்கப்படவில்லை எனவும் கொங்கிறீட் கட்டுமானத்தில் உடைவுகள் காணப்படுவதாகவும் மீண்டும் ஒரு வெள்ளப்பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் கட்டுமானங்களில் உடைவு ஏற்படலாம் என அவர் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *