மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் அமரதாஸ ஆனந்த தெரிவித்தார்.
நாவிதன்வெளி பிரதேச சபையின் 58 ஆவது அமர்வு பிரதேச சபை சபா மண்டபத்தில் ஆரம்பமான நிலையில் 2023 ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று சபையில் தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில் உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றன.
இதன் போது சபையின் பெருன்பான்மையான உறுப்பினர்கள் தவிசாளர் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மக்களின் தேவைகளை தவிர்த்து தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் ஒவ்வொரு உறுப்பினர்களின் வரவு செலவு திட்ட உரையின் பின்னர் உடனடியாக பதிலளிக்கும் வகையில் தவிசாளரும் தன்பக்க நியாயங்களை சபையில் முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து மின்குமிழ் தொடர்பில் சபையில் எழுந்த சர்ச்சை காரணமாக வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்ட நிலையில் தவிசாளரினால் எதிர்வரும் டிசம்பர் 20 ஆம் திகதி வரை சபை ஒத்தி வைக்கப்பட்டது.
சபை ஒத்தி வைப்பினை ஏற்று கொள்ளாத உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும் தவிசாளர் சபையினை விட்டு வெளியேறியமையினால் சபை நடவடிக்கைகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.