யாழ் பல்கலைக்கழக 'ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை' உத்தியோகபூர்வமாக திறந்துவைப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) நேற்றையதினம்(06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது.

ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணைய ஊடகங்களில் ஒருசேரப் பயிற்சி பெறுவதற்கான வசதிகளையும் உபகரணங்களையும் கொண்டதாக செய்தியறை அமைக்கப்பட்டுள்ளது.

ஹெல்வெற்றாஸ் நிறுவனம் இலங்கையின் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கும் சிந்தனை அரும்புகளங்களை (Incubator Spaces) உருவாக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

யாழ். நகரின் ஜூம்மா பள்ளி வீதியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஊடகக் கலையகம் அமைந்திருக்கும் வளாகத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஹெல்வெற்றாஸ் சிந்தனை அரும்புகளத்தின் கருத்திட்ட முகாமையாளர் சந்துலா கும்புகஹே, ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பேராசிரியர் எஸ்.ரகுராம், இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்ற நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் மொகமட் அசாத் மற்றும் ஹெல்வெற்றாஸ் மற்றும் இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்ற அதிகாரிகள், ஊடகக் கற்கைகள் துறை விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் பல்செயற்பாட்டுக் களமானது பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் மாணவர்கள், துறைசார் நிபுணர்கள், ஊடகத் தொழில்வாண்மையாளர்கள், வளவாளர்கள் ஆகியோருக்கிடையே இணைந்து செயற்படல் மற்றும் கூட்டுழைப்பு என்பவற்றுக்கான இயலுமையை வழங்கக்கூடியதாக அமையும் என இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஹெல்வெற்றாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

வெளிப்பாட்டுச் சுதந்திரம், தகவல் உரிமைகளை ஊக்குவிப்பதற்கான இக்கருத்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிதியீட்டம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *