எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – அரசாங்கம் அறிவிப்பு

அண்மைய நாட்டில் பதிவாக எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு இரண்டு நிறுவனங்களே பொறுப்பு என ஜனாதிபதி குழு உறுதிப்படுத்தினால், எரிவாயு இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயங்காது என கூறப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனை தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு நீதியை உறுதிப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறிப்பட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

“அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எரிவாயு சிலிண்டர்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று தான் தனிப்பட்ட முறையில் நம்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

1960 களில் இருந்து அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும், மாநில அமைப்புகளும் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளும் எரிவாயு சிலிண்டர்கள், ரெகுலேட்டர்கள், அடுப்பு மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் தொடர்பான தரங்களைச் செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தலைமையிலான குழு தன்னார்வமாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இராஜாங்க அமைச்சரின் கூற்றுப்படி, நவம்பர் 28ம் திகதி 28 எரிவாயு வெடிப்பு தொடர்பான சம்பவங்களும், நவம்பர் 29ம் திகதி 16 எரிவாயு வெடிப்பு தொடர்பான சம்பவங்களும், நவம்பர் 30ம் திகதி 34 சம்பவங்களும், டிசம்பர் 1ம் திகதி 53 சம்பவங்களும், 2ம் திகதி 60, 3ம் திகதி 142 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 4ம் திகதி 78, டிசம்பர் 5ம் திகதி 44 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு சமையல் எரிவாயு பாவனை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply