மாண்டஸ் சூறாவளியினால் இலங்கையில் பதிவான சேதவிபரங்கள் வெளியானது!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் கடற்பகுதியில் ஏற்பட்ட ‘மாண்டஸ்’ சூறாவளியினால் 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளியினால் வீசிய பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக 5,640 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், அதில் 5 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 21,644 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூறாவளியின் தாக்கம், பலத்த காற்று, மழை, கடுமையான குளிர் காரணமாக பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஏற்பட்ட அனர்த்தத்தினால் மரங்கள் முறிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஊவா மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாகாணத்தில் 2,806 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 2,874 குடும்பங்களைச் சேர்ந்த 10,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *