பதவிவிலக மறுக்கும் சம்பந்தன் – ஆரம்பிக்கப்படவுள்ள 'கோ கோம் சம்பந்தன்' போராட்டம்! – கசிந்த தகவல்

திருகோணமலையில் செயற்படாத பாராளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) நடைபெற்ற போது, இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கடந்த மாதம் நடந்த போது, திருகோணமலையை சேர்ந்த மக்கள் குழுவொன்று வவுனியாவிற்கு வந்து, தமிழ் அரசு மத்தியகுழுவுடன் கலந்துரையாடியது.

திருகோணமலையில் நில அபகரிப்பு, இனப்பரம்பல் மாற்றம், வேலைவாய்ப்பில் சமத்துவமின்மை, மக்கள் பிரச்சனையை பேசும் வாய்ப்புக்கள் இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய திருகோணமலை மக்கள், சம்பந்தன் பதவி விலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை நியமிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இரண்டு முறை மட்டுமே கலந்து கொண்டதாகவும், அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கூட்டமைப்பு தரப்பினர் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், சிங்கள கட்சிகள் தரப்பின் உறுப்பினர்கள் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் மட்டும் நன்மைகளை பெறுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இரா.சம்பந்தன் பதவிவிலகாவிட்டால், கோ கோம் சம்பந்தன் போராட்டத்தை திருகோணமலையில் ஆரம்பிப்போம் என்றனர்.

இந்த விவகாரம் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் அன்றைய தினம் எழுப்பப்பட்ட போது, இரா.சம்பந்தனை பதவிவிலகும்படி தானும் கேட்டதாகவும், அவர் மறுத்து விட்டதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பந்தனுடன் பேசுவதற்கு 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், ப.சத்தியலிங்கம் ஆகியோர் அந்த குழுவில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இரா.சம்பந்தனுடன் பேசுவதற்கு முன்னதாக குடும்பத்தினருடனும் பேசும்படியும், மத்தியகுழுவில் ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று (11) நடந்த மத்தியகுழு கூட்டத்தில், சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. இதன்போது, “திருகோணமலை விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட குழு“ என மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து நேற்று சுட்டிக்காட்டப்பட்டு, சம்பந்தனை சந்திக்க அமைக்கப்பட்ட குழுவின் முடிவு என்ன என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா- குழுவினர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியதாகவும், திருகோணமலை மக்கள் அளித்த ஆணையின்படி தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும், மத்தியகுழுவினால் தன்னை பதவிவிலக கோர முடியாதென்ற பதிலளித்தாகவும் பொருள் கொள்ளும் விதமாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *