மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச் சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உப தலைவர், உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?, மனிதம் பாதுகாக்கப்படுகிறதா?,  அரசே காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் எங்கே?, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவீர்களா?  ஆகிய பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply