முன்னாள் துணைவேந்தர் மீJ தாக்குதல் – 12 மாணவர்கள் இடைநீக்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 12 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என, பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்னவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளுக்கு அமைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதனையடுத்து, அவர்களின் கற்றல் செயற்பாடுகனளத் தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளம் கண்டவுடன் அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்படும் எனவும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் பின்னர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு முகங்கொடுக்க இடமளிக்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் குழுவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது மகன் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *