கிழக்கில் பாரம்பரிய கூத்துக் கலை அண்ணாவிமார் மாநாடு!!

பாரம்பரிய கலையாகிய கூத்துக் கலையில் பல்துறை ஆற்றல் மற்றும் திறமை வாய்ந்தவர்களான அண்ணாவிமார்களுக்கான மாநாடொன்றை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 14.12.2022ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30மணிக்கு மட்டக்களப்பு, பிள்ளையாரடி, தமிழ்ச்சங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இவ்வண்ணாவிமார் மாநாடு கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி. சரண்யா சுதர்ஷன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக போர தீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி அவர்களும் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திரு. சி. சுதாகர் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அத்துடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கருணாகரன் அவர்களும், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் மற்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர் திரு. ச. நேசராஜா ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இவ்வண்ணாவிமார் மாநாட்டிற்கு கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்களும், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளரும், ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளருமான திரு. மு. பவளகாந்தன் அவர்களும், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி அவர்களும், அண்ணாவியார் தலைக்கூத்தர் கு. பொன்னம்பலம் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் தென்மோடி வரவாட்டம், வடமோடி வரவாட்டம், விலாசம் வரவாட்டம், நகைச்சுவை கூத்தின் வரவாட்டம் ஆகிய பாரம்பரிய கலை அம்சங்களுடன், ‘தெய்’ என்ற சிறப்பு நூல் வெளியீடு மற்றும் அண்ணாவிமாரை கௌரவித்து, விருது வழங்கும் வைபவம் ஆகியன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *