தமிழர்கள் கொலை, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும் இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இவருடன் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளரின் கையொப்பத்துடன் அத்திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

யாழ். மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பொது மன்னிப்பை வழங்கியிருந்தார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்ற உறுதிப்பாட்டினையும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வழங்கியுள்ளது,

மனித உரிமை மீறல் அல்லது குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த தகவல்கள் இருக்கும் சந்தர்ப்பங்களில், அந்த நபர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply