தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு மக்கள் நல்ல பாடத்தை புகட்டுவர்! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

எதிர்வரும் 4ம் திகதி சுதந்திர தினத்தன்று இடம்பெறும் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் 13ஐ காரணம் காட்டி குழப்பம் விளைவிப்போருக்கு தமிழ் மக்கள் தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் சுகந்திர தின கரிநாள் போராட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகம் மாணவர் ஒன்றியம் ஆகிய நாம் கிழக்கு பல்கலைக்கழக  மாணவர் ஒன்றியத்துடன் இணைந்து தமிழ் மக்களுக்கான உரிமைக்கான போராட்டத்தை சுதந்திர தினத்தன்று முன்னெடுக்க உள்ளோம்.

எமது கோரிக்கையாக தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்தினை பொங்கு தமிழ் பிரகடனத்தின் வழி நின்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து மட்டக்களப்பு  வரை பேரணியாகச் செல்லவுள்ளோம்.

எமது பேரணிக்கு தமிழ் தேசிய கட்சிகள் பல பூரண ஆதரவை வழங்கியுள்ள நிலையில் சிவில் சமூகம் வர்த்தக சங்கங்கள் பூரண ஆதரவை வழங்கியுள்ளன.

ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் 13 வது திருத்தத்தை நிராகரிக்கிறோம் என எமது பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எம்மிடம் முன் வைக்கிறார்.

தமிழ் மக்கள் 13-வது  அரசியல் தீர்வாக ஏற்கவில்லை என்பது தமிழ் மக்களோடு பயணிக்கின்ற கட்சிகளும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டது.

நாம் வடக்கிலிருந்து கிழக்கு வரை சென்று  அரசியல் கட்சிகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து எமது போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினோம் அவர்கள் பூரண ஆதரவை தந்தார்கள்.

எமது பேரணியானது பொங்கு தமிழ் பிரகடனத்தின் பிரகாரம் சுயநிர்ணய உரிமை, மரவுவழித்தாயகம், தமிழ்தேசியம் மக்களின் எதிர்பார்ப்பு அதையே நாம் முன்னிலைப்படுத்துகிறோம்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக 13 வது திருத்தத்தை  நிராகரிக்கிறோம் என பேரணியில் காட்சிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் நிபந்தனை விதிப்பது யாரோ ஒரு பகுதியினரின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றவா என்ற சந்தேகம் எழுகிறது.

ஆகவே  சில குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக வடக்கு கிழக்கு மக்கள் பேரணியை புறக்கணிப்போருக்கு மக்கள்  தக்க பாடத்தை புகட்டுவார்கள் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply