நீர் விநியோகத்தைத் துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்! வாசுதேவ எச்சரிக்கை

40இற்கும் மேற்பட்ட பிரமுகவர்கள் நீர்கட்டணம் செலுத்த தவறியுள்ளனர் என்றும், நீர் விநியோகத்தைத் துண்டிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பின் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பிரமுகவர்கள் நீரைப் பெற்றுக் கொள்வதற்காக சுமார் 10 மில்லியன் ரூபாவை தேசிய நீர்வழங்கல் மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் செலுத்த தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு அதிக தொகையைச் செலுத்தத் தவறியுள்ளார். அவர் செலுத்தாத தொகை 1.8 மில்லியன் என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஒருவர் நீரைப் பெற்றுக் கொண்டதற்காக சுமார் 45,000 ரூபாவை நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் செலுத்தத் தவறியதாகத் தெரியவந்துள்ளது.

நீர்ப்பாசன கட்டணத்தைச் செலுத்தாதவர்களில் இரண்டு முன்னாள் அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.

முன்னாள் அமைச்சர் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம் தற்போது அமைச்சரவை அமைச்சர் ஒருவரால் பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் அமைச்சரின் நிலுவைத் தொகை தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்திற்குக் குறித்த அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இதையடுத்து, நீர் கட்டணத்தைச் செலுத்தத் தவறிய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகவர்களின் நீர் விநியோகத்தைத் துண்டிக்க எதிர்காலத்தில் நட வடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பின் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply