அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்!

தீர்வுகளை முன்வைப்பதற்காக நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள அனைத்து நாடுகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டார்.

ஆபிரிக்க தூதுவர்களை இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது இலங்கை வெளிவிவகார கொள்கையின் புதிய கட்டம் தொடர்பில் விளக்கமளித்த ஜனாதிபதி, சிரமமான காலகட்டத்தின்போது இலங்கையும் ஆபிரிக்காவும் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்கியமையையும் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார். மேலும் இலங்கைக்கும் சில ஆபிரிக்க நாடுகளுக்கும் பொதுவான சட்ட முறைமை இருப்பதாகவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

நாட்டில் அமைதியை பேணுதல் மற்றும் ஆபிரிக்க கண்டத்துடனான உறவைப் பலப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி வழங்கி வரும் அர்ப்பணிப்புக்கும் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

பொருளாதார கூட்டுறவு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விஸ்தரித்தல், தென்னாபிரிக்காவின் உதவியைப் பெற்றுக் கொடுத்தல், இனங்களுக்கிடையே நிலையான நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்காக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிலைநிறுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதிலேயே தாம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அத்தூதுவர்கள் தெரிவித்தனர்.

மேலும் உலக விவகாரங்களில் தமக்கும் குரல் உண்டு என்ற எண்ணத்தை நிலைநாட்டுவதற்கு அணிசேரா இயக்கம் ஆபிரிக்க நாடுகளுக்கு வாய்ப்பளித்தது என்றும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தார்.

மேற்கு இந்தியப் பெருங்கடலையும் ஆபிரிக்காவையும் நோக்குவதே தற்போது இலங்கையின் கொள்கையாகவுள்ளது. இலங்கை மத்திய கிழக்குடன் உறவுகளைக் கொண்டுள்ளது என்றாலும் அரசியல், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சில நாடுகளுடன் விளையாட்டு ரீதியாக இலங்கை ஆபிரிக்காவுடனேயே இணைந்து செயற்பட வேண்டும். குறிப்பாக, இலங்கை ஆபிரிக்க கண்டத்துடன் திறந்த அரசியல் உரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

பல இலங்கை நிறுவனங்கள் ஆபிரிக்காவில் முதலீடு செய்வதற்கு காத்திருக்கின்றார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்கின்றோம். ஆபிரிக்காவுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய நாம் தயாராக இருக்கின்றோம்.

Leave a Reply