வௌிநாட்டு முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில் விசேட சந்திப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த இந்தியா, பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மாலை தீவு ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி. வி.முரளீதரன் (V. Muraleedharan) முதலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்ததுடன், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது மற்றும் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் பாராட்டுத் தெரிவித்தார்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை வந்த பூட்டானின் கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் ஜெய் பிர் ராய் (Jai Bir Rai) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இங்கு கல்வித் துறையில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன், சுற்றுலா மற்றும் கலாசாரத் துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஏ.கே..அப்துல்லா மொமன் ( A.K. Abdulla Momen) ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இலங்கைக்கும் பங்களாதேஷ்க்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை மேலும் மேம்படுத்துவது மற்றும் நட்பு நாடுகளாக ஒத்துழைப்போடு முன்னோக்கிச் செல்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கை, பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்ட போது பங்களாதேஷ் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கவும் ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

பாகிஸ்தான் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹினா ரப்பானி காரும் (Hina Rabbani Khar) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஜனாதிபதியின் முயற்சிகளை பாராட்டிய பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் மத உறவுகளை விரிவுபடுத்துவது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் நேபாள வெளிவிவகார அமைச்சர் கலாநிதி (Bimala Rai Paudya) பிமலா ராய் பௌத்யாவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஜனாதிபதியின் திட்டத்தைப் பாராட்டிய நேபாள வெளிவிவகார அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹிட்டும் (Abdulla Shahid) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a Reply