இலங்கை வரும் நியூசிலாந்து மக்களுக்கு எச்சரிக்கையா..! வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு எதிராக நியூசிலாந்து மக்கள் அறிவுறுத்தப்படவில்லை என்று நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச சுற்றுலாத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நியூசிலாந்து அங்கீகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்குச் செல்வதற்கு எதிராக நியூசிலாந்தர்களுக்கு இரண்டு வகையான பயண ஆலோசனைகள் உள்ளன.

‘பயணம் செய்ய வேண்டாம்’, ‘அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்’ என்பதே அவையாகும்.

தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையான பயண ஆலோசனைகள் உள்ளன. எனினும் அதில் இலங்கை உள்ளடங்கவில்லை.

மாறாக சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் இலங்கை இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நியூசிலாந்து மக்கள் ‘அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்’ என்பதையே தாம் அறிவுறுத்தியதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் பயண ஆலோசனைகள் அண்மையில் ‘இறுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு செய்தி தவறாகக் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.

Leave a Reply