பாரிய நிலநடுக்கத்தினால் துருக்கி – சிரியாவில் 195 பேர் பலி; இலங்கையர்களுக்கு பாதிப்பா..?

தென் கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில் இன்று அதிகாலை 7.8 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்த 195 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில்,இடிபாடுகளுக்கு இடையில் தேடல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இரு நாடுகளிலும் குறைந்தது 195 பேர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பலி எண்ணிக்கை உயரும் என்று அச்சப்படுகிறது. இந்த நில அதிர்வு சைப்ரஸ், லெபனான் உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

கெய்ரோ வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், சிரிய எல்லையில் இருந்து 90 கிலோமீற்றர் (60 மைல்) தொலைவில் உள்ள காசியான்டெப் நகருக்கு வடக்கே ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, புவி அறிவியலுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) நில அதிர்வு, 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட ஆரம்ப நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக அறிவித்தது.

காசியான்டெப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட்டாக பதிவான அதேவேளை, நகரின் நூர்டாக் பகுதியில் 5.6 ஆகவும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை

இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில் வசிக்கும் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply