தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவது இலகுவானதல்ல- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

பொருளாதாரம் சிக்கலோடு நிர்வகித்துக் கொண்டு போகும்  இவ்வேளையில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவது இலகுவானதல்ல என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே இந்த நேரத்தில் தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் நேற்று (5) நடைபெற்ற மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கூட்டங்களில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

“இங்குள்ள முன்னாள் வேட்பாளர்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, அமைச்சரே தேர்தல் நடம்குமா? இல்லையா? என்பதுதான். அதற்கு நானும், கட்சியின் பொதுச் செயலாளரும் பதில் சொல்ல முடியாது. இது நீதிமன்றம் சென்றுள்ளது. தேர்தலை நடத்த முடியுமா? இல்லையா என்பதை இம்மாதம் 9 அல்லது 10ஆம் திகதிக்குள் நீதிமன்றம் தீர்மானிக்கும்.

 இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது. எட்டு மாதங்களுக்கு முன்பு, எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை. தேவையான மருந்துகள் இல்லை. இப்போது பொருளாதாரத்தை சிக்கலோடு  நிர்வகித்துக்கொண்டு தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது. 

ஒரு தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை ஒதுக்குவது அரசாங்கத்திற்கு இலகுவான விடயம் அல்ல.  அண்மையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் இரண்டு கட்டங்களாக  வழங்க முடிவு செய்யப்பட்டது. சமுர்த்தி கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு தொடர்பில் பிரச்சினைகள் எழுப்பப்பட்டன.

 அப்படியயென்றால், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தவேண்டுமா என்று நாட்டில் பலர் கேட்கின்றனர். நீதிமன்றமும் அதில் கவனம் செலுத்தியிருப்பதாகவே கருதுகிறேன். அரசு என்ற முறையில் சிரமமாக இருந்தாலும், தேர்தலை நடத்துவதா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்.

அண்மையில்  கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஜே.வி.பி வர்த்தக சமூகத்தினருடன் கலந்துரையாடியிருந்தது. தனியார் பல்கலைக்கழகங்கள் பற்றிய   கேள்வியும் கேட்கப்படுகிறது. தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துப்போவதாக ஜனதா விமுக்தி பெரமுன தெரிவித்துள்ளது. 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தான். இதற்கு ஜேவிபி எதிர்ப்பு தெரிவித்தது. தனியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக கிராமத்தில் கூச்சல் போடும் ஜே.வி.பி வர்த்தகர்களுக்கு முன்னால்  தனியார் பல்கலைக்கழகங்களுடன் உடன்படுவதாக கூறுகின்றனர். 

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான திட்டங்கள் குறித்தும் கேட்கின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியை தீர்க்க மூன்றாம் தரப்பு ஒன்று தொடர்பு கொள்ளப்படும் எனவும் ஜே.வி.பி. கூறியது.  ஆனால் அது யார் என்று சொல்லவில்லை. நாங்கள் தற்போது IMF ஐ மூன்றாம் தரப்பினராக இணைத்துள்ளோம். ஜே.வி.பியும் அதைத்தான் செய்கிறது. எங்களுக்குள் எந்த வித்,தியாசமும் இல்லை. இது குறித்து கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போது அந்த கிராமத்து மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும்.

71/88/89 இல் ஜே.வி.பி., ஆட்சியைப் பிடிப்பதற்காக மக்களைக் கொன்றது, அதைக் காப்பாற்றுவதற்காக அல்ல. பாருங்கள் அந்த கட்சியில் சிலருக்கு விரல் இல்லை. கைகள் இல்லை 88/89 காலக்கட்டத்தில் வெடிகுண்டு தயாரிப்பின் முடிவுகள் இவை. உண்மையான கதையை ஜே.வி.பி கிராமத்தில் சொல்லவில்லை, வேறொரு இடத்தில் சொல்கிறது” என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான சாந்த நிஷாந்த, அருந்திக பெர்னாண்டோ, டி.பி.ஹேரத், சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயதுன்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply