ஒன்பதாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 08 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான ஒத்திகை நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் மு.ப 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

Leave a Reply