ஈழத் தமிழர்களுக்கு சுதந்திர வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – தமிழ் அமைப்புகள் அழைப்பு

இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்கு சுதந்திர வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அமெரிக்காவின் 6 தமிழ் அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பில் அவை, அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

நியூயோர்க்கில் உள்ள உலகளாவிய தமிழ் அமைப்புகளின் சம்மேளனம், வடக்கு அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம், நியூயோர்க்கில் உள்ள இலங்கை தமிழ் சங்கம், வோஷிங்டனில் இயங்கும் இலங்கையில் சமத்துவம், நிவாரணத்துக்கான மக்கள் அமைப்பு, வடக்கு கரோலினாவில் உள்ள ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள் மற்றும் வடக்கு கரோலினாவில் இயங்கும் உலகத் தமிழர் அமைப்பு ஆகிய அமைப்புகள் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் கதி என்ன என்பதை அறியக் கோரி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ்க் குடும்பங்கள் வீதியோரப் போராட்டங்களை ஆரம்பித்து ஆறு வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு ஆறு முக்கிய தமிழ் அமைப்புகளும் இந்த கடிதத்தில் அமெரிக்காவைக் கோரியுள்ளன.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தீவில் நிலவும் இனக்கலவரத்தைத் தீர்ப்பதன் மூலம் இலங்கையில் நீதியை முன்னெடுப்பதற்கும், ஜனநாயகத்தை வளர்ப்பதற்கும், சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமான முன்முயற்சிகளை எடுக்குமாறு காங்கிரஸின் தலைவர்களை தாம் கேட்டுக்கொள்வதாக தமிழ் அமைப்புக்கள் கேட்டுள்ளன.

2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரின் இறுதி மாதங்களில் குறைந்தது ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் கணக்கில் வராத நிலையில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, தனது ஜனாதிபதி நினைவுக் குறிப்புகளில், மோதலின் இறுதிக் கட்டங்களை ‘இனப் படுகொலையைத் தடுப்பதில்’ ஐக்கிய நாடுகள் சபையின் தோல்வி என்று குறிப்பிட்டிருந்தன.

இந்தநிலையில் சர்வதேச சட்டத்தின் கீழ், தமிழ் மக்கள் ஒரு தேசம், பொதுவான மொழி, கலாசாரம், வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என அமெரிக்க தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து மதிக்கப்பட வேண்டுமென நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த நோக்கங்களுக்காக, சர்வதேச சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கும், தமிழ் மக்கள் தங்கள் அரசியல் அந்தஸ்தை சுதந்திரமாக தீர்மானிப்பதற்கும், அமெரிக்கா தலைமை ஏற்க வேண்டும் என்று அமெரிக்க தமிழ் அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

Leave a Reply