ரணிலிடமே தற்போது பந்து உள்ளது – நாளையதினம் விளக்கம் தேவை என்கிறார் – மனோ!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமே தற்போது பந்து உள்ளதாகவும் எதிரணியில் இருந்து தாம் அதனை அவதானித்து வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை நாளைய கொள்கை பிரகடன உரையில் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய வம்சாவளி மலையக தமிழர்களையும் தேசியரீதியாக அங்கீரித்து செயலாற்ற வேண்டுமென மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இதே நிலைப்பாட்டில் இருக்கும் என மனோ கணேசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் பலமுறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர் ஆகவே இப்போது பந்து ரணில் அரசு தரப்பில் இருப்பதாக குறிப்பிட்டார்.

இலங்கையை எவர் ஆட்சி செய்தாலும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பிலும், இந்த சமுகத்துக்குள் வரும் இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய பெருந்தோட்ட பிரிவினரின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்து பேசி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியாது என்றும் இந்நிலைப்பாட்டை அடைவதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply