அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற தமிழ் பெண் மாயம்! – கதறும் பிள்ளைகள் SamugamMedia

அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண் ஒருவர் மாயமாகியுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

காணாமல்போயுள்ள பெண்ணின் கணவனும் இரு பிள்ளைகளும் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள வெளிநாட்டு பணியகத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்காக வந்த போதே ஊடகத்திற்கு இந்த தகவலை வழங்கியுள்ளார்.

39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளார்.

இவர் பச்சிளைப்பள்ளி பிரதேச சபை பிரிவில் இயக்கச்சி, கிளிநொச்சி என்னும் முகவரியைக் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரது கணவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீட்டுப்பணிக்காக மனைவி அரபு நாட்டிற்கு சென்றிருந்தார். அவ்வாறான நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அங்கிருந்து பணம் அனுப்பியிருந்தார். 

எனினும் இந்த மாதம் சம்பளம் அனுப்பவில்லை. அதனையடுத்து மனைவியுடன் தொடர்புகொள்ள முயற்சித்த போது, தொடர்பு கிடைக்கவில்லை எனவும், அதனையடுத்து அவர் பணிக்காகச் சென்றிருந்த வீட்டு உரிமையாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி விசாரித்த போது, அவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பதிலில் முரண்பாட்டுத்தன்மை இருக்கின்றது. ஏனெில் வீட்டு உரிமையாளரான பெண், எனது மனைவி, வீட்டின் முன்பக்க வாயிலாலேயே தப்பிச் சென்றார் எனத் தெரிவித்திருந்த நிலையில், அவரது கணவன் வீட்டு மாடியிலிருந்த ஏணியால் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

அவர்களின் முரண்பாடான பதிலாலேயே எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், காணாமல் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவி தொலை பேசியில் உரையாடும் போது, பணிக்கு சென்றுள்ள வீட்டு உரிமையாளர்களுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறித்த பெண்ணின் தொலை பேசி மற்றும் கடவுச்சீட்டு என்பவற்றை பறித்து வைத்துள்ளதாகவும் அதனைத் தருமாறு கேட்டு முரண்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதனையடுத்து 4ஆம் திகதி முதல் மனைவியுடன் எந்தத் தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனையடுத்து வீட்டு உரிமையாளர்களுடன் அரபு மொழியில் உரையாடிய போதே, மனைவி காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

எனது மனைவி தற்போது உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லை என்பது தொடர்பில் எதுவும் தெரியவில்லை. வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு இறந்து விட்டாரா என்பது கூடத் தெரியவில்லை.

ஆகவே அரசியல் தலைவர்களும், நாட்டின் ஜனாதிபதியும் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை, மீட்டுத்தர வேண்டும்.

அவருக்கு என்ன நடந்தது, உயிருடன் இருகக்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் எமக்கு அறியத்தர வேண்டும்.

மனைவி காணாமல் போயுள்ளமை தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போது,

இவ்வாறு வீட்டுப் பணிக்காக செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் எமது வறுமை காரணமாக மனைவி வீட்டுப் பணிக்காக வெளிநாடு சென்றிருந்தார். நானும் இங்கு கூலித் தொழில் தான் செய்து வருகின்றேன்.

தற்போது மனைவி காணாமல் போயுள்ளார். தற்போது நானும் எனது 2 பிள்ளைகளும் மனைவியைக் காணாது தவித்து நிற்கின்றோம்.

எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்க மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply