கடற்றொழில் அமைச்சருக்கெதிராக கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது!samugammedia

கடற்றொழில் அமைச்சர் தமது பிரச்சினை தொடர்பாக கரிசனையுடன் செயல்படுவதில்லை என சிலர் கூறி கூச்சலிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டதே தவிர கடற்றொழில் மக்களின் நலன்சார்ந்ததாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றை ஶ்ரீரங்கேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது பருத்தித்துறை பிரதேச செயலகம் முற்பாக சிலரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவ்ர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

வடமராட்சி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடற்றொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கடுமையயான முயற்சியின் காரணமாக தற்போது அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழில் அமைச்சர் என்ற வகையிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் பாதுகாப்பு துறைசார் அதிகாரிகளுடன் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட உபகரணங்கள் பாவனையை கட்டுப்படுத்துமாறு விடுத்த பணிப்பின் பெயரில் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமில் விசேட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவரது நெறிப்படுத்தலில் கடலோரக் காவலரண்கள் ஊடாக தொழிலுக்காக செல்லும் படகுகள் மற்றும் உபகரணங்களை ஆராய்வு செய்யப்படுவதனூடாக தடைசெய்யப்பட்ட சட்டவிரோத உபகரணங்கள் தடுக்கப்படுகின்றன.

முன்பதாக இவ்வாறான நடைமுறைகள் இப்பகுதியில் இருந்தபோதும் கடற்படையினரால் தமது தொழில்கள், தொழிலுக்கு செல்லும் நேரங்கள் தாமதப் படுவதாகவும் அதனால் தமக்கு சிரமங்கள் ஏற்படுவதாகவும் அமைச்சரது கவனத்தக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து அந்த நடைமுறை தளர்த்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்மைக்காலமாக சட்டவிரோத தொழில்கள் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதி கடற்றொழில் சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கடற்றொழில் சமாசம் மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்புக்களை அடுத்து குறித்த நடவடிக்கையை மீண்டும் இறுக்கமாக அமுல்ப்படுத்துவதற்கு சங்கங்கள் இணக்கம் தெரிவித்திருந்தன.

இதனை தொடர்ந்து இந்த நடவடிக்கை தற்போது இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து குறிப்பாக சுருக்குவலை மற்றும் தங்கூசி வலைப்பாவனை அதிகளவில் தடுக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply