யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்த அனைவரும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும்- கேதீஸ்வரன் ஆலோசனை! samugammedia

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்தவும் இறப்புக்களைத் தவிர்ப்பதற்கும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்த யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ. கேதீஸ்வரன், விசேட டெங்குக் கட்டுப்பாட்டுத் தினங்கள் தொடர்பாகவும் அறிவித்தார்.

டெங்கு நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,யாழ் மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 1160 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டதுடன் ஒரு இறப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பெய்துவரும் பருவ மழைக்குப் பின்னர் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்த வேண்டிய ஒரு அவசர தேவை உணரப்படுகின்றது. எனவே யாழ் மாவட்டத்தில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் ஒருங்கிணைப்பதற்கும் மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு தினங்கள் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விசேட தினங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகளைத் திட்டமிடவும் ஒருங்கிணைப்பதற்கும் பிரதேசமட்ட டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டம்  பிரதேச செயலாளர்கள் தலைமையிலும் கிராமியமட்ட டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டங்கள் கிராம சேவையாளர்கள் தலைமையிலும் இவ்வாரம் இடம்பெறும்.

இக்காலப்பகுதியில் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிப்பதன் மூலம் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும். பொது மக்கள் தமது வீடுகளையும் வீட்டுச் சுற்றாடலையும் பார்வையிட்டு டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை அழிக்க வேண்டும். 

வீட்டுச் சுற்றாடலில் காணப்படும் நீரேந்தும் கொள்கலன்களான சிரட்டைகள், இளநீர்க் கோம்பைகள், தகரப்பேணிகள், பிளாஸ்ரிக் பாத்திரங்கள், ஐஸ்கிறீம் கப், பொலித்தீன் பைகள், பழைய ரயர்கள், தண்ணீர்ப் போத்தல்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும். 

பூச்சாடிகளில் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளல் வேண்டும். தண்ணீர்ப் பீலிகளில் நீர் தேங்காதவாறு துப்பரவு செய்தல் வேண்டும். மீன்தொட்டிகளில் தண்ணீரை அடிக்கடி மாற்றுதல் வேண்டும். தண்ணீர் சேகரித்து வைக்கும் பிளாஸ்ரிக் வாளிகளையும் தொட்டிகளையும் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும்.

பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் சிரமதான அடிப்படையில் பாடசாலை வளாகத்தில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும். அரச தனியார் அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் வணக்கஸ்தலங்கள் பொதுச் சந்தைகள் போன்ற இடங்களைச் சிரமதான அடிப்படையில் சுத்திகரிக்க வேண்டும். பராமரிப்பின்றி காணப்படும் காணிகள் மற்றும் வீடுகளை உரிமையாளர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் உடனடியாக துப்பரவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளல் வேண்டும்.     

இக்காலப்பகுதியில் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்க வீடுகளுக்கும் பொது நிறுவனங்களுக்கும் டெங்குக் கண்காணிப்புக் குழுவினர் வருகை தரவுள்ளனர். இக்களத் தரிசிப்பின்போது டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்கப்படும்.

அதன்பின்னரும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதுவிடின் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய காலப்பகுதியில் காய்ச்சல் கடுமையான தலைவலி மூட்டுவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக கர்ப்பவதிகள் முதியோர்கள் இவ்விடயத்தில் மிக அவதானமாகவும் துரிதமாகவும் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

டெங்கு நோயுடன் ஒருவர் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்குச் சமூகந்தந்தால் அவரை முற்றாகக் குணப்படுத்த முடியும். அதே வேளை மிக தாமதமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டால் இறப்புக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்பதனை கடந்த காலங்களில் எமது மாவட்டத்தில் கண்கூடாகக் காணக்கூடியதாக இருந்தது.

எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பலைக் கட்டுப்படுத்தவும் இறப்புக்களைத் தவிர்ப்பதற்கும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கவேண்டும் – என்றார்.

Leave a Reply