நுவரெலியாவில் கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்- ஜீவன் தொண்டமான்! samugammedia

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் அமைச்சரவையிலும் வலியுறுத்தவுள்ளேன் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (12.05.2023) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலாவதியான மருந்து பாவனையாலேயே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது குணமடைந்து வருகின்றனர்.

ஜனாதிபதி, நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் ஆகியோருடன் இது சம்பந்தமாக அமைச்சரவையில் பேச்சு நடத்தவுள்ளேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை நான் மேற்கொள்வேன்.

நுவரெலியாவில் வறுமை வீதம் அதிகரித்துள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் போதாது. சம்பள நிர்ணய சபைக்கு நாம் செல்லவுள்ளோம். இதற்கு தொழிற்சங்கங்களின் ஆதரவு முக்கியம். 

கடந்த 2022 ஆம் ஆண்டு பணவீக்கம் 60 வீதமாக இருந்தது. தற்போது 35 வீதமாக குறைவடைந்துள்ளது. அடுத்த டிசம்பர் ஆகும்போது பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

Leave a Reply