மத்திய மாகாண கிளையின் கராட்டி சுற்றுப் போட்டிகளும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு! samugammedia

‘Shotokan Karate Academy International’ கலையகத்தின் மத்திய மாகாண கிளையின் கராட்டி சுற்றுப் போட்டிகளும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வும் பொகவந்தலாவை ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று (13.05.2023) நடைபெற்றது.

Shotokan Karate Academy International தலைமையகத்தின் பிரதம ஆசிரியர் சிகான். அன்ரோ டினேஷ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார்.

இந்த மத்திய மாகாண கராட்டி சுற்றுப் போட்டியில் நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இருந்து பெருமளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நினைவுப் பரிசில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்த நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், Shotokan Karate Academy International கலையகத்தின் மத்திய மாகாணத்தின் பொறுப்பாசிரியர் எம்.தம்பிராஜ், மத்திய மாகாணத்தின் அமைப்பாளர் ஆறுமுகன் யோகராஜா மற்றும் அதிபர்கள், கராத்தே பயிற்றுவிப்பாளர்கள், கராத்தே மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சர் உரையாற்றும் போது,

போட்டியாளர்கள் மிகவும் சிறப்பான முறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.

கராத்தே’ என்பது தற்காப்பு கலை என்பதற்கு அப்பால் அதன்மூலம் மனதை ஒருநிலைப்படுத்தக்கூடிய ஆற்றல் கிடைப்பதுடன், சவால்களை, போட்டிகளை எதிர்கொள்வதற்கான பக்குவமும் ஏற்படுகின்றது. போட்டியாளர்களிடம் இப்பண்புகளை காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் தேசிய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச மட்டத்திலும் சாதிக்க வேண்டும்.

மலையக மக்கள் என்றால் யாவரும் நினைப்பது தேயிலை தோட்டத்தில் வேலை செய்பவர்கள் என்பது மாத்திரமே நினைக்கின்றனர்.

ஆனால் அதையும் தாண்டி இன்று நமது மக்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பல்வேறு தடைகளை தாண்டி நாம் வந்துவிட்டாலும், நாம் இன்னும் போக வேண்டிய தூரம் இருக்கின்றது. இதை அடைவதற்கு குழந்தைகளின் கல்வியே வழி செய்யும் என்றார்.

Leave a Reply