ஜனாதிபதிக்கு வந்த அவசர கடிதம்..! தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு..! samugammedia

கிளிநொச்சி – உருத்திரபுரத்தில் அமைந்திருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் ஆய்வு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பதானது இனகுரோதத்தின் உச்சமாகவே நோக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மு.சந்திரகுமார் மேலும் குறிப்பிடுகையில்,

நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஆலயத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அது சமூக நெருக்கடியையே உண்டாக்கும். நாட்டில் அமைதியையும், சமூக ஒருங்கிணைவையும் ஏற்படுத்துவதற்கு பதிலாக அவற்றைச் சிதைக்கும் விதமாக அரசாங்கமே நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதனால் நாட்டுக்கே பாதிப்புகள் ஏற்படும்.

அத்துடன் இந்த நடவடிக்கையானது யுத்தத்தில் கொல்லப்பட்டோரை நினைவு கொள்ளும் 18.05.2023 அன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட ரீதியில் சமூக நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுவதாகவே தெரிகிறது.

நாட்டில் அமைதிச் சூழலை உருவாக்கி, பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு, பொருளாதார ரீதியில் நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் தாங்கள், இது தொடர்பாக உடனடியாக உரிய நடவடிக்கையை மேற்கொண்டு, இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏற்கனவே வடக்குக் கிழக்குப் பகுதிகளில் சிலைகளை அமைப்பது, விகாரைகளைக் கட்டுவது என்றவிதமாக தொல்பொருள் திணைக்களத்தினால் பொருத்தமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply