எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் நாட்டின் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும் அது இங்கிலாந்து நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டிற்கு உட்பட்டதாக அமையும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் குறித்த இழப்பீட்டிற்குள் செல்லுபடியாகும் என சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பிரகாரம், இழப்பீட்டு வரம்புகள் தொடர்பில் இங்கிலாந்தின் லண்டன் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்நாட்டு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு மாற்றுவது குறித்து எதிர்வரும் முதலாம் திகதி முடிவு அறிவிக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது..