மோட்டார் சைக்கிளுக்காக சிறுவனை கடத்திய இருவர்..! – பணயக் கைதியாக்கி தாக்குதல் samugammedia

தவணைக் கட்டணத்தை செலுத்தாத மோட்டார் சைக்கிளை கைப்பற்றுவதற்காக, அந்த மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றுக்கொண்டிருந்த 15 வயதான சிறுவனுடன், மோட்டார் சைக்கிளை இருவர் கடத்திச் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர் பல மணிநேரத்துக்குப் பின்னர், அச்சிறுவனை அழைத்துவந்து விட்டவேளையில், அவ்விருவரையும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கி பணயக் கைதிகளாக வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதில் பலத்த காயங்களுக்கு உள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மீரிகம பொலிஸார் தெரிவித்தனர்.

மீரிகம முதுகுருகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவன், தன்னுடைய தந்தையின் மோட்டார் சைக்கிளில் ஏதோவொரு தேவைக்காக, கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது ஓட்டோவில் இருவர் வந்திறங்கியுள்ளனர் அவர்களில் ஒருவர், அச்சிறு​வனை ஓட்டோவில் ஏற்றிக்கொண்டு, மற்றையவர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு நிட்டம்புவையை நோக்கிச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில் தங்களுடைய பிள்ளையை காணவில்லையென,   பொலிஸில்​ பெற்றோர் முறைப்பாடு செய்ய, அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து சிறுவனை தேடத்தொடங்கியுள்ளனர்.

பல மணிநேரத்துக்குப் பின்னர், ஓட்டோவில் அச்சிறுவனை ஏற்றிவந்த இருவரும், சிறுவனை இறக்கிவிட்டு செல்வதற்கு முயன்றுள்ளனர். 

அப்போது அவ்விருவரையும் சுற்றிவளைத்த கிராமவாசிகள், அவ்விருவர் மீதும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதனால் அவ்விருவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர். ஓட்டோவையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுற்று ஸ்தலத்துக்கு விரைந்த மீரிகம பொலிஸ் அதிகாரிகள், கிராமவாசிகளால் பணய கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த இவ்விருவரையும் மீட்டு, கைது செய்தனர். அதிலொருவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே அந்த சிறுவனை, மீளவும் ஒப்படைப்பதற்கு சென்றிருந்தார். அவர், வாடகைக்கு அமர்த்தியிருந்த ​ஓட்டோவிலேயே சிறுவனை ஏற்றிச்சென்றிருக்கின்றார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.  

Leave a Reply