தினேஷ் சாப்டர் மரணத்தில் மர்மம்- பிரேத பரிசோதனையில் தொடரும் சிக்கல்-நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! samugammedia

கொழும்பு – பொரளை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் சடலத்தை இம்மாதம் 25 ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஐவர் அடங்கிய நிபுணர் குழுவை 25 ஆம் திகதி காலை 8:30 மணிக்கு பொரளை மயானத்திற்கு வருகை தருமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25 ஆம் திகதி சடலம் மீட்கப்பட்ட இரண்டு நாட்களுக்குள் காலி கராபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள ஐவரடங்கிய நிபுணர் மருத்துவக்குழுவிற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பான உண்மைகள் மற்றும் தேவையான செலவுகளை நீதி அமைச்சு ஏற்கும் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களம் சடலத்தை காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான செலவை ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சாப்டரின் சடலத்தை மீட்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றிற்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் (18.05.2023) கொழும்பு பல்கலைக்கழக சட்ட வைத்திய நிபுணர் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் குழு நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த நீதவான் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானித்தார்.

இதற்கமைய, தினேஷ் சாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என விசாரிக்கும் ஐவரடங்கிய நிபுணர் குழு, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் சரியான தீர்மானம் எடுப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தின் நோயியல் நிபுணரான பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவை கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்த ஜயசூரிய நியமித்தார்.

இந்த ஐவரடங்கிய மருத்துவக்குழுவின் தலைவராக, கொழும்பு பல்கலைக்கழக சட்ட வைத்திய நிபுணர் அசேல மெண்டிஸ், ருஹுணு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டி.சி.ஆர். பெரேரா, பேராதனைப் பல்கலைக்கழக நோயியல் நிபுணர் பேராசிரியர் டி. பெர்னாண்டோ, பேராதனை வைத்தியசாலையின் சிரேஷ்ட நீதிமன்ற வைத்திய அதிகாரி எஸ். சிவசுப்ரமணியம் மற்றும் காலி கராபிட்டிய வைத்தியசாலையின் சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி ஜி.ஆர். ருவன்புர ஆகியோர் உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்டனர்.

கடந்தாண்டு 15/12/2022 திகதி பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

இந்த மரணத்திற்கான காரணத்தைத் தீர்மானிக்க, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 375வது பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, இந்த ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply