53 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக கோரியுள்ள அரசாங்கம் – எதற்கு தெரியுமா..??? samugammedia

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 53 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக கோரப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த கிராமிய வீதி முதலீட்டுத் திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய வீதித் திட்டங்களை விரைந்து முடிப்பதற்காகவே இந்த நிதியை கோரியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் புணரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகவுள்ள வீதிகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் உதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பெரும்பாலான வீதி அபிவிருத்தி திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 கடனுதவி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், விசேட முன்னுரிமையுடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மிக அத்தியாவசியமான வீதிகளை அடையாளம் காண ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வீதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இடைநிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply