பெரியகல்லாறு கடலாச்சியம்மன் வைகாசி திருச்சடங்கு நிகழ்வு நிறைவு –ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரள்வு! samugammedia

இலங்கையின் முதல் கடலாச்சியம்மன் என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு கடலாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் வைகாசி திருச்சடங்கு நேற்று அதிகாலை நிறைவுபெற்றது.

ஆலயத்தின் திருச்சடங்கினை முன்னிட்டு நேற்று முன்தினம் பால்குட பவனி நடைபெற்றது.சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பால்குட பவனி நடைபெற்றதுடன் இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பாற்குடம் ஏந்திவந்து அம்மனுக்கு அபிசேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து அம்மன் எழுந்தருளச்செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் அம்மனின் பூசைப்பொருட்கள் மற்றும் முகக்களைகள் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்களிப்புடன் பறவைக்காவடி,காவடிகள் ஆடிவர,நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்திவர ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

ஆலயத்தினை அம்மன் ஊர்வலம் வந்தடைந்ததும் ஆலய திருச்சடங்கின் திருக்கதவு திறக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

நேற்று நள்ளிரவு 12.00மணியளவில்  கடலாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்;சடங்கின் முக்கிய நிகழ்வான பூரண கும்பம் நிறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

சிறுமியர்கள் ஆலத்தியெடுக்கும்போது பூரணகும்பம் நிறுத்தப்படுவதுடன் இதன்போது கும்பமானது மேலெழுந்து கீழ்நோக்கிவரும் நிகழ்வு வருடாந்தம் பண்டைய காலம் தொடக்கம் நடைபெற்றுவருகின்றது.

அதனை தொடர்ந்து நேற்று அதிகாலை நடைபெற்ற செவ்வாய்க்கு ஆடும் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு இனிது நிறைவுபெற்றது.

Leave a Reply