போதைவஸ்து வியாபாரத்துடன் தொடர்புடைய முக்கிய புள்ளிகளை கைது செய்யாமல் அரசு படங்காட்டுகிறது – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு…!samugammedia

இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் வாழக்கூடிய இலங்கை தீவில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் போதைவஸ்து வியாபாரத்திலும் பாவனையிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயமாக இருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஒரு வாரமாக இலங்கையில் போதைவஸ்துக்களை ஒழிப்பதற்காக பொலிசார், இராணுவம், அதிரடிப்படை மற்றும் முக்கியமான அமைப்புகளால் முழு இலங்கையிலும் போதைவஸ்து பாவனையாளர்கள், போதைவஸ்து வியாபாரம் செய்பவர்கள் என பல்லாயிரக்கணக்கானோரை கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிக்கப்பட்ட சில பேர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலர் பொலிஸ் தடுப்பு காவலில் உள்ளதாகவும், ஏனைய பல பேர் சிறைச்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலான செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான கைதுகள் இடம்பெறும் நிலையில் இவ்வளவு காலமும் பொலிசாரும், படையினரும், இலங்கை அரசாங்கமும் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அமைச்சர் கூறுகின்றார் போராட்டங்கள் நிகழ்ந்ததால் இந்த வேலைகளை செய்வதற்கு பொலிசாரால் முடியவில்லை, இப்பொழுது தான் அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கின்றது என்ற கருத்துப்பட அவர் கூறுவது ஒரு உண்மையான செய்தியாக எங்களுக்கு தெரியவில்லை.

கிராம மட்டங்களிலும், பாடசாலை மட்டங்களிலும் இந்த போதைவஸ்துகள் வியாபாரம் செய்கின்ற  தகவல்களை நீங்கள் திரட்டி இருக்கின்றீர்கள் என்றால் இதற்கு முன்னரே இதனை வளர விடாமல் கைதுகளை முன்னெடுத்து இருக்கலாம் என்பதுதான் எமது கருத்து.

குறைந்தபட்சம் இப்போதாவது பொலிசார் அந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது பாராட்டப்படக்கூடிய விடயம். ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால் இங்கே இருக்கக்கூடிய முக்கியமானவர்கள், அதாவது இதற்கு முன்பு பாராளுமன்றத்திலும் கூட பேசப்பட்ட என்னவென்றால் பாராளுமன்ற உறுப்பினர்களை சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் இதுவரை அவ்வாறு யாரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக எங்களால் அறிய முடியவில்லை.

அத்துடன் இந்தப் போதைவஸ்துகளை பெருமளவில் கடத்துகின்ற அல்லது விற்பனை செய்கின்ற முக்கியஸ்தர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே அவ்வாறு இருக்குமானால் கைது செய்யப்படுபவர்கள் கிராம மட்டங்களில் சிறியளவில் வியாபாரம் செய்பவர்களாக தான் இருக்க வேண்டும்.

அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இங்கே முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த போதைப்பொருடாகளை இலங்கைக்குள் கொண்டு வந்து வியாபாரம் செய்யும் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட வேண்டும். வேறு நாடுகளில் இருந்து இனிமேல் போதைவஸ்துக்கள் இலங்கைக்குள் வராத அளவிற்கு அவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் இந்த போதைவஸ்தினை இல்லாது ஒழிப்பதற்கான வழிமுறையை மேற்கொள்ள முடியும். இல்லாது விட்டால் ஒரு பத்தாயிரம் பேரை கைது செய்தாலும் அவர்கள் இன்னும் ஒரு பத்தாயிரம் பேருக்கூடாக இந்த வியாபாரத்தை தொடங்கி நடத்துவார்கள் என்பது தான் கவலைக்குரிய விடயம்.

முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படாமல் அவர்கள் வொளியில் இருக்கும் வேளையில் அமைச்சரும் பொலிஸாரும் இணைந்து பெரிய காரியங்களை செய்து முடித்தது போன்று விழாக்களை கொண்டாடுவது என்பது சரியான செயற்பாடல்ல. இலங்கை அரசாங்கமும் பொலிஸாரும் பாரிய  சாதனைகளை புரிந்திருக்கின்றார்கள் என்ற படத்தினை மக்களுக்கு காண்பிப்பதற்கு அவர்கள் விரும்பலாம். ஆனால் முக்கியமாக அப்படியான படங்களை காட்டுவதற்கு முன்பாக முழுக்க முழுக்க இதனை கை கொண்டு நடத்துபவர்களை கைது செய்த பின்னர் இந்த விழாக்களை கொண்டாடுவார்களாக இருந்தால் அது ஒரு அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லா விட்டால் இது ஒரு ஏமாற்றுத்தனமான வேலையாகத்தான் இருக்கும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *