வடக்கு மாகாண ஆளுநரின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி..!!Samugammedia

மண்ணக மாந்தரின் பாவம் போக்க விண்ணக தேவன் மனித உருவெடுத்த இந்த நாளை உலகவாழ் மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையாக இன்று கொண்டாடுகின்றனர். இந்த மகிழ்ச்சி பொங்கும் நன்நாளில் இலங்கைவாழ் கிறிஸ்தவர்களுக்கு நத்தார் வாழ்த்து தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம்.

“வாக்கு மனிதனானார் நம்மிடையே குடிகொண்டார்” -(யோவான் 1:14 ) என திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, இறைமகன் இயேசு குழந்தையாக அவதரித்த திருநாள் கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. 

தியாகம்,கருணையை எடுத்துக் காட்டும் காலக்கண்ணாடியாக இயேசுவின் பிறப்பு அமைந்துள்ளது. இறைமகன் இயேசு என்றும் எம்மோடு இருக்கிறார் என்பதை கிறிஸ்மஸ் பண்டிகை உணர்த்துகின்றது.

அந்தவகையில், இயேசு கிறிஸ்து தன் பிறப்பின் ஊடாக கொண்டுவந்த விடுதலையை, மீட்பை அனைவரும் உணர்ந்து அனுபவிக்க வேண்டும். அதுவே உண்மையான மகிழ்ச்சி. 

ஆகவே இந்த கிறிஸ்மஸ் விழாவானது துன்பங்கள், துயரங்கள், வறுமை, இயற்கையின் இடர்கள், நோய்கள் அனைத்திலிருந்தும் அனைவருக்கும் விடுதலை தருவதாக அமைய பாலகன் இயேசுவிடம் பிரார்த்திக்கின்றோம்.

பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீண்டெழும் இக்காலப்பகுதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்கள் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்நாளில் பாலகன் இயேசுவின் அன்பும், அருளும், ஆசீர்வாதமும் என்றும் உங்களுக்கு கிடைப்பதாக. அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் அகமகிழ்வடைகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *