தமிழரசுக்கட்சியின் தலைவருக்கான தேர்தலில் குதிப்பேன், இப்போது அதற்காக கற்றுக்கொண்டிருக்கிறேன்! சாணக்கியன் சபதம்…! samugammedia

தமிழரசுக்கட்சியின் தலைவராக வருவதற்கு பல தகுதிகள் இருக்க வேண்டும். அந்த தகுதி இன்னும் எனக்கு வரவில்லை, இப்போது கற்றுக்கொண்டிருக்கிறேன். 5 அல்லது 10 வருடங்களில் அந்த தகுதி எனக்கு வந்துவிடும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

இன்று வடமராட்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழர் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது தொடர்பாகவும் கட்சிக்குள் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாகவும் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு தொடர்ந்து அவர் பதிலளிக்கையில், 

ஜனாதிபதித்தேர்தலில் கட்சி சார்பாக ஒருவரை நியமிப்பது பற்றி கூட்டத்தில் தீர்மானித்த பின்பே முடிவு எடுக்கப்படும்.  கடந்த 10 வருடங்களாக அரசியலில் அவதானிப்பவர்களுக்கு, யார்  அடுத்த தலைவர் என்பது பற்றி தெரியும். தமிழ் மக்கள் ஏங்கி கொண்டிருப்பது ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதாகும். எங்களுடைய பல பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினூடாகவே தீர்வு காண முடியும். அதாவது அதிகார பகிர்வினூடாக மட்டுமே எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும். டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக வடக்கில் இருக்கிறார். அவரால் வடக்கில் பிரச்சினை மட்டுமே இருக்கிறது. அவரால் அவருடைய துறை சம்பந்தமான பிரச்சினையை மட்டுமே கையாள முடியும். ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு அவரால் தீர்க்க முடியும்? ஆகவே எங்களுக்கு அதிகாரங்கள் கிடைத்தால் நாங்களே எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும். 

இந்த அரசியல் தீர்வுக்காகவே எங்கள் கட்சி செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது.  ஆகவே அரசியல் சம்பந்தமாக பரந்த அறிவு ஆழமாக  இருக்க வேண்டியது அவசியம். இதை தெரிந்த ஒருவர் தான் தலைவராக வரமுடியும். 

இவ்வாறான விடயங்களை நாங்கள் முன்வைக்கும் போது சர்வதேச ரீதியாக நாங்கள் ஆதரவை திரட்ட வேண்டும். சர்வதேச தொடர்புகள் இருந்தால் தான் மாற்றங்களை செய்ய முடியும். அத்தோடு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தங்களையும் கொடுக்க முடியும். மொழி மட்டும் சர்வதேச தொடர்பில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. விடயங்களும் தெரிந்திருக்க வேண்டும் அதன் மூலமாக நாங்கள் ஆதரவை எடுத்து நடைமுறைப்படுத்துவதும் முக்கியமாகும். இந்த 2 தகுதிகளும் தலைவருக்கு அவசியமாகும். 

அவ்வாறான தகுதி என்னிடம் இருந்தால் நானே தலைவர் பதவிக்கு குதித்து விடுவேன். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எனக்கும் அந்த தகுதி வரலாம். நான் எனது பெயரை ஏன் கொடுக்கவில்லை என்றால், எனக்கு தகுதி இன்னும் வரவில்லை. நான் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறேன். எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக யார் வரவேண்டுமென்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும். 

இவ்வாறான சூழலில் தனது தலைவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ளது. எங்களுடைய கட்சி  எங்கள் பிரதேசத்தில் பிளவுபடாமலே செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. கட்சிக்குள் நடக்கும் விடயங்கள் கட்சிக்குள் பிளவு என்பது அல்ல. எனவே அனைவரும் நிலைமைகளை புரிந்துகொண்டு  செயற்பட வேண்டும். என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *