5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

வடமாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டது.

கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

லைகா ஞானம் அறக்கட்டளையின் இலங்கைக்கான பொறுப்பாளர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட ஞானம் அறக்கட்டளை குழுவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்வின்போது பெற்றோர் இல்லாது உவினர்கள் பாதுகாவலர்களுடன் வாழ்ந்துவரும் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக மாதாந்தம் 5000 ரூபாய் வழங்குமாம் திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் இந்த உதவி தேவைப்படுவோராக இனங்காணப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் ஒரு சிறுவருக்கு மாதம் 2000 ரூபாய் உதவி வழங்கினாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அவர்களின் தேவைகளை போதுமான அளவு பூர்த்தி செய்ய இந்தத் தொகை போதுமானதாக இல்லை.

இதனால், லைக்கா குழுமத்தின் தலைவரும் ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் ஒவ்வொரு சிறாருக்கும் மாதாந்தம் தலா 5000 ரூபாய் உதவித் தொகையை வழங்கி பாதிக்கப்படக்கூடிய அனைத்து சிறார்களுக்கும் உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

அதற்கிணங்க இந்த நிதியானது சிறார்களுக்கு சிறந்த உணவு> கல்வி> சுகாதாரம் என ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிக்கவுள்ளது.
இந்தத் திட்டத்தின் பயனாளர்களாக முல்லைத்தீவு, வவுனியா மன்னார் யாழ்ப்பாண மாவட்டங்களில் வாழும் பல ஆயிரக்கணக்கான சிறார்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் மட்டும் இந்த திட்டத்திற்காக வருடாந்தம் பல கோடி ரூபாய்களை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஒதுக்கியுள்ளது.

அத்தோடு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்த முயற்சியை நாடு முழுவதும் விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஞானம் அறக்கட்டளை தற்போது மேற்கொண்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.


லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவி வழங்குவதே இந்த அறக்கட்டளையின் நோக்கமாகும்.

Leave a Reply