அரச காணியை அடாத்தாகப் பிடித்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

அட்டாளைச்சேனை, கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியை அடாத்தாகப் பிடித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.

கோணவத்தை ஆற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரச காணியைச் சட்டவிரோதமாகப் பொதுமக்கள் அடாத்தாகப் பிடித்துள்ளதைத் தடை செய்வதற்கு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்துக்கமைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தீர்மானத்துக்கமைய பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர், கரையோரம் பேணல் திணைக்களத்தின் பொறியியலாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், நீர்ப்பாசனப் பணிப்பாளர், நில அளவை திணைக்களத்தின் பணிப்பாளர், அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவிப் பணிப்பாளர், பிரதேச சபை தவிசாளர் ஆகியோர் நேரடியாகக் கள விஜயம் மேற்கொண்டு குறித்த பிரதேசங்களைப் பார்வையிட்டனர்.

அண்மைக்காலமாக ஆற்றின் இரு மருங்கிலுமுள்ள அரச காணியைப் பொதுமக்கள் அடாத்தாகப் பிடித்து எல்லையிட்டு மண் நிரப்பி வருவதைக் காண முடிகின்றது.

இதனால் இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படக்கூடிய சேதங்கள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கூறினார்.

அடாத்தாகக் காணிகளைப் பிடித்திருப்போர் உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கிராம சேவகர்களை ஈடுபடுத்துமாறும் பிரதேச செயலாளரை அவர் கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *