வெடுக்குநாறிமலை ஆலயத்தில் தடைகளை தகர்த்து தரிசனம் – தொடரும் பொலிசாரின் அராஜகம்

 வவுனியா – வெடுக்குநாறிமலையை சுற்றி  பொலிஸாரால் கடுமையான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்துசென்று, பொதுமக்கள் ஆலய தரிசனத்தை முன்னெடுத்தனர். 

இன்று மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு அது தொடர்பான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த ஆலயத்தின் பிரதம பூசாரி மற்றும் நிர்வாக உறுப்பினர் ஆகியோர் நேற்று இரவு நெடுங்கேணி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

அரச காட்டுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றையதினம் வவுனியா நீதவானிடம் முற்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்றையதினம் ஆலயத்தினை சுற்றி விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன்,

ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு பொலிஸ் வீதித்தடை போடப்பட்டு, அந்த பகுதிக்குள் வசிப்பவர்கள் மாத்திரம் பொலிசாரின் விசாரணைக்கு பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை மகாசிவராத்திரி வழிபாட்டிற்காக தூர இடங்களில் இருந்து வருகைதந்த பொதுமக்கள், உள்ளே செல்லமுடியாதவாறு பிரதான வீதியில் தரித்தி நிற்கின்றனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், செல்வராசா கயேந்திரன், வேலன் சுவாமிகள், ரவிகரன் ஆகியோரும் சென்றனர். 

அவர்களது வழிகாட்டலுடன் காலை 10 மணியளவில் பொதுமக்கள் ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் ஒலுமடு பிரதான வீதியில் இருந்து சுமார் 5 கிலோமீற்றர் தூரம் காட்டுப்பாதையூடாக நடந்துசென்று பொதுமக்கள் ஆலயத்தினை அடைந்தனர்.

இதேவேளை குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள விகாரைகளில் இருந்து பௌத்த மதகுருக்களும் சிங்கள மக்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவின் அனைத்து பகுதிகளில் இருந்து பொலிசார் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு குறித்த பகுதியில் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *