பாடசாலை சமூகங்களோ அல்லது எந்தவொரு தரப்பினரோ என்னிடம் திரண்டு வந்து தமது கோரிக்கைகளையும் அதற்கான தீர்வுகளையும் தரும்போது அவற்றில் நியாயத் தன்மை இருந்தால் அவற்றை ஏதோ ஒருவகையில் நிறைவு செய்து கொடுப்பது எனது இயல்பு என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதன் ஒரு செயற்பாடுதான் இந்த பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிலையமும் அமைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பச்சிலைப்பள்ளியில் எரிபொருள் நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று முற்பகல் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையதின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக எரிபொருள் நிலையத்தின் பெயர் பலகை மற்றும் நாடா வெட்டி திறந்து வைத்திருந்தார்.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதி உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடபிராந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர், வடபிராந்திய கூட்டுறவு ஆணையாளர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் மேலும் கருத்துரைத்த அமைச்சர்,
எந்தவொரு தரப்பினரும் என்னிடம் வந்து தமது கோரிக்கைகளையும் அதற்கான தீர்வுகளையும் தரும்போது அவற்றில் நியாயத் தன்மை இருந்தால் அவற்றை ஏதோ ஒருவகையில் நிறைவு செய்து கொடுப்பதுதான் எனது இயல்பு.
நான் யாழ் மத்திய கல்லூரியின் ஒரு பழைய மாணவனாக இருக்கலாம். ஆனால் இவ்வாறான ஒரு செயற்பாட்டைத்தான் யாழ் மத்தியகல்லூரி விடயத்திலும் நான் மேற்கொண்டிருந்தேன். அதேபோன்றே .மகாஜனா கல்லூரி விடயத்தையும் கையாண்டிருந்தேன்
மக்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தால் அதை நிறைவு செய்து கொடுப்பதே எனது நீண்டகால செயற்பாடாகவும் இருந்துவருவதுடன் தொடர்ந்தும் அது இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.
இதேவேளை இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சமீபத்தில் தனது கருத்தொன்றில் மத்திய கல்லூரி அதிபர் நியமன விடயத்தில் நான் அரசியல் தலையீடு செய்ததாகவும் இதனால் அது வடக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்வித்துறையில் ஒரு கறுத்த நாளாக அமைந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். .
ஆனால், இன்று இந்த எரிபொருள் நிலையத்தை திறப்பதற்கு என்னுடைய தலையீட்டினால்தான் சாத்தியமானது என்றும் சரியான அரசியல் வழிநடத்தல் இருந்தால் எதுவும்’ சாத்தியமாகும் என்றும் கருத்து கூறியிருக்கின்றார்கள்.
அந்தவகையில் அரசியல் தலையீடு என்பது எமது நாட்டைப் பொறுத்தளவில் அவசியம். ஆனால் அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கியமானது.
அந்தவகையில் நான் எந்தவொரு விடயத்திலும் அரசியல் தலையீடு செய்தால் அது நியாயமானதும் சரியானதுமாக இருந்தால் மட்டுமே செய்வேன்.
இதேவேளை ஆயுதப் போராட்டம் தொடர்பாகவும் நான் கடந்த காலங்களில் கருத்துக்களை கூறிவந்திருக்கின்றேன். தவறான வழிநடத்தலால்தான் இந்த அழிவுகளும் இழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றது என்பதை இன்று தமிழ் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
அதேபோன்று நாட்டை அச்சுறுத்திய பயங்கரவாதம் ஏதோ ஒரு வகையில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மக்கள் அமைதியாக வாழும் சூழல் உரவாகியுள்ளது.
இதேநேரம் எனது நிலைப்பாடு இருப்பதை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும்’ என்பதுதான். அந்தவகையில் சரியான அரசியல் தலையீடு அரசியல் நெறிப்படுத்தல் அரசியல் வழிநடத்தல் என்பது எந்தவொரு விடயத்திற்கும் அவசியமானதாக இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.