ஆண், பெண் சமூக சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலங்கள் இரண்டும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டத்தின் பிரகாரம் தனியான ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசியலமைப்பின்படி பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கும் வலுவூட்டலுக்குமான ஏற்பாடுகளை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (8) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின தேசிய கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், ஆண், பெண் சமூக அடிப்படையைக் கொண்ட வரவு செலவுத் திட்டத்தை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது ஆசியாவிலேயே முதன்முறையாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரப் பிரிவு ஸ்தாபிக்கப்படும் எனவும், அதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.
இதுவரையில் எமது நாட்டில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதாக மாத்திரமே இருந்த போதிலும், பெண்களின் உரிமைகள் பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் தற்போது தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயங்கள் அனைத்தையும் தேசியப் பொறுப்பாகக் கருதி நாடு முழுவதிலும் உள்ள பெண்களுக்கு தெளிவூட்டுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவ்வாறு அல்லாமல் இந்தச் சட்டங்கள் விதிமுறைகளைக் கொண்டு வருவது மாத்திரம் போதுமானதாக இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத் தேசிய கொண்டாட்டம் “அவளுக்கான பலம் – நாட்டுக்கான முன்னேற்றம்” என்ற தொனிப்பொருளில் பெருமையுடன் நடைபெற்றதுடன், நாடளாவிய ரீதியில் இருந்து பெண்கள் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான பெண்கள் இதில் கலந்துகொண்டனர்.